அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - சுதந்திரப் பிரகடனம் | 9th Social Science : History: The Age of Revolutions
சுதந்திரப் பிரகடனம்
1776ஆம் ஆண்டு ஜனவரி மாதம் "இயல்பறிவு" (Common Sense) என்னும் நூல் வெளியிடப்பட்டது. மிக அண்மையாக இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய தாமஸ் பெயின் என்பவரே இதை எழுதினார். ஆங்கிலேய முடியாட்சிக்குக் கட்டுப்பட்டிருப்பதை விமர்சித்த இப்பிரசுரம் முழுமையான சுதந்திரம் வேண்டும் எனக் கூறியது. வெகுவிரைவில் இப்பிரசுரத்தின் 1,00,000 பிரதிகள் விற்பனையானது. "இயல்பறிவு மக்களின் மனங்களில் வலுவான மாற்றத்தினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது" என ஜார்ஜ் வாஷிங்டன் கருத்துத் தெரிவித்தார். 1776ஆம் ஆண்டு ஜூன் 7இல் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ஹென்றி லீ சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். பெருமளவிலான விவாதங்களுக்குப் பின்னர் தாமஸ் ஜெபர்சன் எழுதிய அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் 1776ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாளையே அமெரிக்கர்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடிவருகின்றனர்.