பிரெஞ்சுப் புரட்சி | வரலாறு - பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் | 9th Social Science : History: The Age of Revolutions
பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம்
பிரெஞ்சுப் புரட்சி பல நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது. அது பிரான்சில் வரம்பற்ற முடியாட்சி முடிவடைந்ததன் அடையாளமாயிற்று. அனைத்து நிலப்பிரபுத்துவத் தனியுரிமைகளும்,
மதகுருமார்களின் அதிகாரங்களும் ஒழிக்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்த இப்புரட்சி அரசின் வலிமை பெருகுவதற்கு வழியமைத்துக் கொடுத்தது. தேசியம் என்ற சிந்தனை வளர்வதற்கும்,
ஓர் உறுதியான நடுத்தர வர்க்கம் உதயமாவதற்கும் இப்புரட்சி வழிகோலியது.
இப்புரட்சி மக்களின் இறையாண்மையை உயர்த்திப் பிடித்தது. ஐரோப்பாவில் தாராளவாத அரசியலமைப்பைக் கொண்ட அரசுகள் உருவாவதற்கு இப்புரட்சி அடித்தளமிட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோட்பாடு உலகம் முழுவதும் சுதந்திரத்தை நேசிப்போரின் தாரக மந்திரமானது. இப்புரட்சி ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் பின்னாளைய தாராளவாத ஜனநாயக அரசியல் இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்தது.