பாய்வுக் கட்டுப்பாடு | C++ - மடக்கின் பகுதிகள் மற்றும் மறு செய்கை அறிக்கைகள் | 11th Computer Science : Chapter 10 : Flow of Control
மடக்கின் பகுதிகள்
ஒவ்வொரு மடக்கும் பல்வேறு பயன் பாடுகளுக்கான நான்கு கூறுகளை கொண்டுள்ளது.
• தொடக்க மதிப்பிருத்தும் கோவை
• சோதிப்பு நிபந்தனை கோவை
• புதுப்பித்தல் / மிகுத்தல் கோவை
• மடக்கின் உடற்பகுதி
தொடக்க மதிப்பிருத்தும் கோவைகள் : நிரலின் கட்டுப்பாடு மடக்கினுள் நுழையும் முன் கட்டுப்பாட்டு மாறிகள் தொடக்க மதிப்பிருத்தல் வேண்டும். ஒரு கட்டுப்பாட்டு மாறிக்கு தொடக்க மதிப்பிருத்தும் செயல்பாடு தொடக்க மதிப்பிருத்தும் கோவையின் கீழ் இடம் பெறும். கட்டுப்பாட்டு மாறியில் தொடக்க மதிப்பிருத்தல் மடக்கு செயல்படும் முன்பாக, ஒரே ஒரு முறை தான் செயல்படுத்தப்படும்.
பரிசோதிப்பு நிபந்தனை கோவை: பரிசோதிப்பு நிபந்தனை கோவை என்பது ஒரு மடக்கின் உள்ளே அமைந்துள்ள உடற்பகுதியிலிருக்கும் கட்டளைத் தொகுதி நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
கொடுக்கப்பட்ட நிபந்தனை சரி (அதாவது 1) எனில், மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்படும் இல்லையேல், மடக்கை விட்டு வெளியேறும்.
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் சோதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு, மடக்குகளை நுழைவு சோதிப்பு மடக்கு மற்றும் வெளியேறல் சோதிப்பு மடக்கு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
நுழைவு சோதிப்பு மடக்கில், நிபந்தனை கோவை மடக்கினுள் நுழையும் முன் சோதிக்கப்படுகிறது. அவ்வாறின்றி வெளியேறல் சோதிப்பு மடக்கில் நிபந்தனைக் கோவை மடக்கினை விட்டு வெளியேறும் முன்பாக சோதிக்கப்படுகிறது.
புதுபித்தல் / மிகுத்தல் கோவை: இது மடக்கு கட்டுப்பாட்டு மாறியின் மதிப்பை மாற்றம் செய்வதற்கு பயன்படுகிறது. இந்த கூற்று, மடக்கின் உடற்பகுதி செயல்பட்டு முடிந்த பின், மடக்கின் இறுதியில் செயல்படுத்தப்படுகிறது.
மடக்கின் உடற்பகுதி: மடக்கின் உடற்பகுதி என்பது மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கூற்று அல்லது கட்டளைத் தொகுதியை குறிக்கும். நுழைவு சோதிப்பு மடக்கில், முதலில் நிபந்தனை கோவை செயல்படுத்தப்பட்டு, சுழியம் அல்லாத எண்ணாக இருப்பின், மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்படும் இல்லையெனில் மடக்கு முடிவு பெறும். வெளியேறல் சோதிப்பு மடக்கில், முதலில் மடக்கின் உடற்பகுதி மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்டு, பின் நிபந்தனைக் கோவை சரிபார்க்கப்படுகிறது. சோதிப்புக் கோவை சரி எனில், மடக்கின் உடற்பகுதி திரும்ப நிறைவேற்றப்படும் இல்லையெனில் மடக்கு முடிவுப் பெறும்.