தாவரவியல் - மூடுவிதைதாவரங்களின் இனப்பரிணாமக்குழும வகைப்பாடு | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
மூடுவிதை தாவரங்களின் இனப்பரிணாமக் குழும வகைப்பாடு (Angiosperm Phylogeny Group Classification)
பூக்கும் தாவரங்களின் மிக அண்மைக்கால வகைப்பாடு இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் இனப்பரிணாம வழி தரவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. இக்குழும வகைப்பாட்டின் நான்கு பதிப்புகள் APG I, APG II, APG III & APG IV முறையே 1998, 2003, 2009, 2016 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பதிப்பும் முந்தைய பதிப்பிற்கு மேம்பட்டதாக உள்ளது. தாவரப் புற அமைப்பியல், உள்ளமைப்பியல், கருவியல், மகரந்தவியல், குரோமோசோமவியல், உட்கருவியல், தாவர வேதியியல், குறிப்பாகப் பசுங்கணிகத்திலுள்ள இரண்டு மரபணுக்களிலிருந்து (atpB மற்றும் rbcL) பெறப்பட்ட மூலக்கூறு தரவுகள், உட்கரு ரிபோசோம் 18s DNA போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒற்றைக்கால் வழிவந்த குழுவை (monophyletic group) ஏற்றுக்கொண்டனர்.
சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு APG IV (2016)-ல் 64 துறைகள் மற்றும் 416 குடும்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 416 குடும்பங்களில் 259 குடும்பங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
APG IV வகைப்பாட்டின் சுருக்க வரைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
கியூ உட்படக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முக்கிய உலர் தாவர சேமிப்பு நிலையங்கள் தங்களுடைய சேகரிப்புகளின் வரிசையை APG முறைப்படி மாற்றி வருகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான தாவரக் குடும்பங்களின் உலகச் சரிபார்ப்புப் பட்டியல் (கியூவில் உள்ளது உட்பட) APG அமைப்புப்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் தாவரங்களின் சமீபத்திய புகைப்பட ஆய்வு APG III அமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், ஸ்டேஸ் எழுதிய பிரிட்டிஷ் தீவுகளின் நிலையான தாவரங்களின் பட்டியல் எனும் நூலின் சமீபத்திய பதிப்பானது, APG III அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
மூடுவிதை தாவரங்கள் மூன்று கிளைகளாகத் தொடக்ககால மூடுவிதை தாவரங்கள், ஒருவிதையிலைத் தாவரங்கள் மற்றும் உண்மை இருவிதையிலைத் தாவரங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூடுவிதை தாவரங்கள் 8 துறைகள் மற்றும் 26 குடும்பங்களாக (ANA கிளை + மக்னோலிட்ஸ் + குளோரான்தேல்ஸ்) கீழ்க்காணும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ANA வரிசை
A அம்போரெல்லேல்ஸ்
N நிம்ஃபயேல்ஸ்
A ஸ்ட்ரோபெய்லியேல்ஸ்
• விதைகள் பொதுவாக இருவிதையிலையுடையவை.
• நறுமண எண்ணெய்கள் (ethereal oils) இருத்தல்.
• இலைகள் வலை நரம்பமைவுடையவை.
• மலரின் ஒவ்வொரு வட்டமும் பல பாகங்களைக் கொண்டிருத்தல் அல்லது மூன்றாக / மூன்றின் மடங்கில் காணப்படல்.
• மகரந்தக்தாள் அகன்ற மகரந்த கம்பிகளுடன் இருத்தல்.
• மகரந்தங்கள் நான்கு மகரந்தப் பைகள் பெற்றது.
• மகரந்தத்துக்கள் ஒருகுழியுடையது.
• சூலக இலைகள் தனித்திருத்தல்.
• கரு மிகச்சிறியது.
ஒருவிதையிலைத் தாவரங்கள் 11 துறைகள், 77 குடும்பங்களாக (அடிப்படை ஒருவிதையிலைத் தாவரங்கள் + லிலியாயிட்ஸ் + கமெலினிட்ஸ்) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
• விதைகள் ஒருவிதையிலையுடையவை.
• முதன்மை வேர் குறுகிய வாழ்வுடையது.
• ஒற்றை அடிபக்க முதன்மையிலை (prophyll).
• நறுமண எண்ணெய்கள் அரிதாகக் காணப்படல்.
• வாஸ்குலார் கற்றைகள் சிதறிக் காணப்படும் தண்டுகள்.
• இலைகள் தனித்தவை மற்றும் இணை நரம்பமைவுடையது.
• மலரின் பாகங்கள் மூன்றின் மடங்காக அமைந்திருத்தல்.
• பூவிதழ் வட்டம் பெரும்பாலும் இதழ்களையுடையது.
• மகரந்தத்துக்கள் ஒருகுழியுடையது.
• சூலகத்தண்டு பொதுவாக உள்ளீடற்றது.
• நுண்வித்தாக்கம் அடுத்தடுத்து நடைபெறும்.
உண்மை இருவிதையிலைத் தாவரங்கள் 45 துறைகள் மற்றும் 313 குடும்பங்களாக (ஆரம்பகால விரிவடைந்த உண்மை இருவிதையிலைத்தாவரங்கள் + சூப்பர் ரோசிட்ஸ் + சூப்பர் அஸ்டிரிட்ஸ்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
• விதைகள் எப்பொழுதும் இருவிதையிலைகளுடையவை.
• கணுக்கள் மூன்று இடைவெளியுடன் மூன்று இலை இழுவையுடையது.
• இலைத்துளை அனோமோசைட்டிக்.
• நறுமண எண்ணெய் அரிதாக உள்ளது.
• கட்டைத்தன்மையுள்ள அல்லது மென்மையான தாவரங்கள்.
• இலைகள் தனியிலை அல்லது கூட்டிலை பொதுவாக வலை நரம்பமையுடையவை.
• மலரின் பாகங்கள் பெரும்பாலும் இரண்டின் மடங்கு, நான்கின் மடங்கு, ஐந்தின் மடங்காகக் காணப்படும்.
• நுண்வித்தாக்கம் ஒரே நேரத்தில் நடைபெறும். சூலகத்தண்டு திடமானது.
• மகரந்தத்துகள் முக்குழியுடையன.
APG வகைப்பாடு ஒரு வளர்ந்துவரும் வகைப்பாட்டு முறையாகும். பல்வேறு தாவரவியல் துறைகளிலிருந்து வெளிவரும் புதிய தரவுத் தொகுப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது இதில் மாற்றம் ஏற்படலாம். இது உலகெங்கிலும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வகைப்பாடு. மேலும் அனைத்து முன்னணி வகைப்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பயிற்சி வகைப்பாட்டியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்தியத் தாவரவியல் பாடத்திட்டத்தினுள் இன்னும் பரவலாக ஊடுருவ வேண்டியுள்ளது.
வகைப்படுத்துதல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள நமது அறிவின் நிலையை வெளிப்படுத்துகின்றது. புதிய தகவல்களைப் பெறும்போது இது தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கும்.