தாவரவியல் - உலர் தாவர மாதிரி ஹெர்பேரியம் - தயாரிப்பு மற்றும் பயன்கள் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
உலர் தாவர மாதிரி ஹெர்பேரியம் - தயாரிப்பு மற்றும் பயன்கள்
ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையம் அல்லது இடமாகும். தாவரங்களைச் சேகரித்து அழுத்தி, உலர்த்திய பின்பு தாளில் ஒட்டிப் பாதுகாக்கப்படும் இடமாகும். ஹெர்பேரியம் ஆய்வு மையமாகவும் தாவர வகைப்பாட்டிற்குத் தொடர்புடைய தாவர மூலப்பொருள்களைப் பெற்றும் விளங்குகிறது.
ஹெர்பேரியம் தயாரித்தல்
ஹெர்பேரியம் என்பது அழுத்தி, உலர்த்தி வடிவமைக்கப்பட்ட உலர்தாவர ஒட்டுத்தாளில் ஒட்டப்பட்ட, விளக்கக்குறிப்பு விவரச்சீட்டுடன் கூடிய தாவரத் உலர்த் தொகுப்பாகும்.
ஹெர்பேரியம் தயாரிக்கும் முறை கீழ்க்கண்ட படிநிலைகளைக் கொண்டது.
1. தாவரம் சேகரித்தல்:- களச் சேகரிப்பு (Field collection).
- சேகரித்து, திரவங்களில் பதப்படுத்துதல் (Liquid preserved collection).
- உயிருள்ள பொருட்களைச் சேகரித்தல் (Living collection).
- மூலக்கூறு படிப்புக்கு அல்லது ஆய்விற்குச் சேகரித்தல் (Collection for molecular studies).
2. சேகரிப்பு களம் குறித்த தகவல்களை ஆவணப்படுத்துதல் (Documentation of field site data).
3. தாவர வகை மாதிரி தயாரித்தல் (Preparation of plant specimen).
4. உலர்தாவரஒட்டுத்தாளில் உலர்தாவர வகைமாதிரிகளை ஒட்டுதல். (Mounting herbarium specimen).
5. ஹெர்பேரிய குறிப்பு விவரச்சீட்டைத் தயாரித்தல் (Herbarium labels).
6. பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்குதல்களிலிருந்து உலர்தாவர ஒட்டுத்தாளை பாதுகாத்தல்
உங்களுக்குத் தெரியுமா?
2009-ஆம் ஆண்டில் கியூ ஹெர்பேரியம் - மூலம் உலகின் மிகச் சிறிய நீர் அல்லி நிம்பேயா தெர்மாரம் (Nymphaea thermarum) அழியும் நிலையில் இருந்து விதை வளர்ப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தாவரவியல் கள ஆய்வு மையம்
(Botanical Survey of India).
1890-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ல் முதன் முதலில் பொட்டனிக்கல் சர்வே உருவாக்கப்பட்டுப் பின்னர் இந்தியத்தாவரவியல்களஆய்வு மையம் எனப் பெயரிடப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் - பொருட்டு டாக்டர் இந்தியச் சுதந்திரத்துக்குப்பின் நாட்டின் தாவர வளங்களைப் பராமரிக்க வேண்டுமென உணரப்பட்டது. பத்மஸ்ரீ முனைவர் E.K. ஜானகியம்மாள் அவர்கள் 1952 அக்டோபர் 14-ந் தேதியன்று இச்சிறப்புப்பணியில் அமர்த்தப்பட்டார். 1954 மார்ச் 29ந் தேதி இந்திய அரசு அனுமதி அளித்தப்பின் இறுதியாகக் கொல்கத்தாவைத் தலைமையகமாகத் தாவரவியல் கள ஆய்வு மையம் (BSI) மாற்றியமைக்கப்பட்டது. ஜம்முவிலுள்ள தாவித் தாவரவியல் பூங்காவானது முனைவர் E.K. ஜானகியம்மாளின் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு உலர்தாவர நிலையங்கள்
தேசிய உலர்தாவர நிலையங்கள்
ஹெர்பேரியத்தின் பயன்கள்:
1. வகைப்பாட்டியல் தொடர்பான படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு ஆதாரங்களாகப் பயன்படுகிறது.
2. தாவர உலர்வகை மாதிரிகளை ஒழுங்கான முறையில் வரிசைப்படுத்தி வைத்துப் பயன்படுத்திட உதவுகிறது.
3. புதிதாகச் சேகரிக்கப்பட்டு, சந்தேகத்திற்க்குட்பட்ட புதிய தாவர வகைமாதிரிகளை ஒப்பிட, தாவர ஒப்பீட்டு வகைக்காட்டு உதவுகிறது.
4. தாவரப் பல்வகைத்தன்மை, சுற்றுசூழல் மதிப்பீடு, சுற்றுச்சூழல் செயல் நுணுக்கும் ஆய்வுக்குரிய புதிய பகுதிகளைக் கணக்கிட ஆவணப்படுத்தப்பட்ட ஒப்பீடு வகைகாட்டு (Voucher specimen) தாவரவகை உலர்மாதிரி முக்கியப் பங்கு வகிக்கிறது.
5. ஹெர்பேரியம் பல்லுயிர் வளத்தை ஆவணப்படுத்த ஒரு வாய்ப்பினை அளிக்கின்றது. சூழலியல், உயிரி பேணுதல் ஆகியவற்றைப் பயிலப் பயன்படுகிறது.
கியூ ஹெர்பேரியம் (Kew Herbarium)
1. தென்மேற்கு இலண்டனில் 1840-ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஹெர்பேரியம் என அழைக்கப்படும் ராயல் தாவரவியல் தோட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு 30,000க்கும் மேற்பட்ட பல்வேறுப்பட்ட உயிருள்ளதாவரங்களும், பல்வகைத்தன்மையுடைய தாவரவகைகளும், பூஞ்சை வகைகளும் காணப்படுகின்றன. ஏழு மில்லியன் பதப்படுத்தப்பட்ட தாவர மாதிரிகள் இங்கு உள்ளன. இங்குள்ள நூலகத்தில் (library) தாவரங்கள் பற்றிய 7,50,000 தொகுப்புகள் (Volumes) மற்றும் வரைபடத் தொகுப்புகள் 1,75,000 பதிப்புகள், புத்தகங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், நாளேடுகள் மற்றும் தாவர வரைபடங்கள் உள்ளன.