தாவரவியல் - வகைப்பாட்டியலின் படிநிலைகள் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
வகைப்பாட்டியலின்
படிநிலைகள்
கரோலஸ்லின்னேயஸ் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு வரிசையில்
படிநிலைகளாக அமைந்துள்ளன. இந்தப் படிநிலைகளின் கீழ்ப்படியாகச் சிற்றினம் உள்ளது.
சிற்றினம்: உயிரினங்களில் ஒன்றோடொன்று மிக அதிகளவு உருவ ஒற்றுமையுடன்
காணப்படுபவைச் சிற்றினங்களாகும். இவை வகைப்பாட்டியலின் கடைசிப் படிநிலை ஆகும். எடுத்துக்காட்டாக
ஹீலியாந்தஸ் அன்னுவஸ், ஹீலியாந்தஸ் ட்யூபரோஸம் ஆகியவை அதிக அளவு புற அமைப்பு ஒற்றுமை
கொண்ட குறுஞ்செடிகள். ஆயினும் சிறிதளவில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
ஹீ. ட்யூபரோசஸ் பல பருவக் குறுஞ்செடியாகும்.
பேரினம்: ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்தப்பண்புகளைக்
கொண்ட பல சிற்றினங்களின் தொகுப்பு பேரினமாகும். ஒரே பேரினத்தின் பல சிற்றினங்கள் பல
பண்புகளில் ஒத்துக்காணப்பட்டாலும் மற்றொரு பேரினத்தின் சிற்றினங்களிலிருந்து வேறுபடுகின்றன.
குடும்பம்: ஒன்றோடொன்று ஒரே வகையான ஒத்த பண்புகளுடன் காணப்படும்
பல பேரினங்கள் கொண்டத் தொகுப்பு ஒரு குடும்பம் ஆகும். சிற்றினங்களைவிடப் பேரினங்கள்
அவற்றிற்கிடையே குறைந்த அளவிலேயே வேறுபடுகின்றன.
துறை: ஒத்த பண்புகளோடு அமைந்த குடும்பங்களின் தொகுப்பாகும்.
வகுப்பு: பல துறைகளின் குறைந்த அளவு ஒத்தப்பண்புகளுடன் கூடிய
தொகுப்பாகும்.
பிரிவு : வகைப்பாட்டியல் படிநிலையில் பல வகுப்புகளைக் கொண்ட
ஒரு தொகுப்பாகும்.
எடுத்துக்காட்டு: மக்னோலியோஃபைட்டா.
பெரும்பிரிவு
: இது வகைப்பாட்டியலின் படிநிலைகளில் உச்சகட்ட, உயர்ந்த
படிநிலையாகும். எடுத்துக்காட்டு ப்ளாண்டே.