தாவரவியல் - தாவரங்களின் வகைப்பாடு | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
தாவரங்களின் வகைப்பாடு
ஒரு நூலகத்தில் ஹாரி பாட்டர் கதைப் புத்தகத்தை எடுப்பதற்காகச் செல்கின்றீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்நூலகத்தில் புனரமைக்கும் பணி நடை பெற்றுக்கொண்டிருப்பதால் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதைக் கவனிக்கிறீர்கள். நீங்கள் தேடும் சரியான புத்தகத்தைக் கண்டுபிடிக்கக் கடினமாக உணர்கிறீர்களா? சரியான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கப் பலமணி நேரம் கூட ஆகலாம் அல்லவா? எனவே புத்தகங்கள் அனைத்தும் பல பிரிவுகளில் வகைப்படுத்தியபின் மறுநாள் வர முடிவு செய்கின்றீர்கள். அப்புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டுச் சாகசப் புத்தகங்கள் ஓர் அடுக்கிலும், திகில், கற்பனை புத்தகங்கள், அகராதிகள் என்று தனித்தனி அடுக்குகளிலும் வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறீர்கள். இப்போது நீங்கள் ‘ஹாரி பாட்டர்’ புத்தகம் கற்பனைப் பிரிவில் இருக்கும் என்பதை அறிவீர்கள். அப்புத்தகத்தை எடுப்பதற்குப் பத்து நிமிடங்களுக்குக் குறைவான நேரமே உங்களுக்குத் தேவைப்படும் அல்லவா? ஏனென்றால் புத்தகங்கள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு ஓர் ஒழுங்குமுறையில் அடுக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
இதேபோல் உலகில் பலதரப்பட்ட தாவரக் குழுமங்கள் உள்ளன. இவை அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்ள இயலுமா? எனவே இதைச் சாத்தியமாக்கச் சில வழிமுறைகளை உருவாக்குவது அவசியம். உயிரினங்களின் பரந்த வேறுபாடுகளையும், பல்வகைமையையும் ஒப்பிட்டு அறிய உயிரியலில் வகைப்படுத்துதல் அவசியமாகிறது.
உயிரியல் வகைப்பாடு என்பது சிறந்த ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு உயிரியலாளர்கள் உருவாக்கியதாகும். அறிவியல் அடிப்படையில்தாவரங்களின் பெரும் பல்வகைமையைப் பற்றிய தகவல்களை அட்டவணைப்படுத்தவும், சார்ந்த தகவல்களை மீளப் பெறுவதற்குமானது என வகைப்பாட்டியல் வரையறுக்கப்படுகிறது.
தாவரங்களில் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமை மட்டுமின்றி அவற்றினிடையே காணப்படும் இனப்பரிணாமத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களாக ஒழுங்கமைப்பதற்கு வகைப்பாடு வழிவகுக்கின்றது. உயிரினங்களுக்கிடையேயான உறவை முறையாக வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வகைப்பாட்டியலாளர்கள் உயிரினங்களை வகைப்படுத்துவதற்கான முறைமையைப் பல படிநிலை அலகுகளில் உருவாக்கியுள்ளனர். புதிதாகக் கண்டறியப்படும் உயிரினங்களைச் சரியான இடத்தில் பொருத்தி வகைப்படுத்த இயலும் வகையில் நெகிழ்வுத்தன்மையுடன் வகைப்பாடு இருக்கவேண்டும்.
வகைப்பாட்டின் அவசியம்
• உயிரினங்களின் வகைப்பாட்டைப் புரிந்துகொள்ளுதல் மற்ற
துறைகளை நுண்ண றியவும், நடைமுறையில் எளிதில் பயன்படுத்தவும் உதவுகிறது.
• பலதரப்பட்ட தாவரங்களின் படிநிலைகளையும் அவற்றிற்கிடையேயான
உறவுமுறைகளையும் அறிந்துகொள்ள உதவுகிறது.
• தாவரவியல் மாணவர்களுக்கு, தாவர பல்வகைமையை விளக்கவும்
அதனுடன் பிற உயிரியல் துறைகளுக்கிடையேயான தொடர்பைப் பயிலவும், பயிற்சியளிக்கவும் உதவுகிறது.