தாவரவியல் - சிற்றினக் கோட்பாடுகள் - புறத்தோற்றம், உயிரியல், மரபு வழி | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
சிற்றினக்
கோட்பாடுகள் (புறத்தோற்றம், உயிரியல், மரபு வழி)
வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினமாகும். மேலும்
சிற்றினம் தனி உயிரினங்களின் கூட்டமாகிய சிற்றினங்கள் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளன.
1. மற்ற உயிரினக்கூட்டங்களிலிருந்து ஒரு உயிரினக் கூட்டத்திலுள்ள
உயிரினங்கள் யாவும் நெருங்கிய தொடர்புடன் ஒத்துக்காணப்படுகின்றன.
2. சிற்றினம் பொது மூதாதையரின் இனத்தோன்றல்கள் ஆகும்.
3. பாலினப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இவை இயற்கையில்
தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் திறன் பெற்றவை.
சிற்றினக் கோட்பாடு பொதுவாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
இனப்பரிணாமவியல் செயல்முறைகளுக்கு வலியுறுத்தும் கோட்பாடுகள் சிற்றினங்களைத் தனி அலகுகளாகப்
பராமரிப்பதன் விளைவாக வேறுபட்ட புதிய சிற்றினங்களைப் பரிணாமத்தின் வாயிலாகத் தோற்றுவிக்கின்றன.
பரிணாமத்தின் முடிவுகளால் தோன்றியவைகளை வலியுறுத்துவது மற்றொரு கோட்பாடாகும்.
சிற்றினங்களின்
வகைகள்
சிற்றினங்களில் பல வகைகள் உள்ளன. அவையாவன:
1. பரிணாமச் செயல்முறை விளைவாகத் தோன்றியவை (Process of Evolution) - உயிரியல் சிற்றினங்கள்
(அ) தனிமை படுத்துதலால் தோன்றிய சிற்றினங்கள்
2. பரிணாம முடிவின் விளைவாகத் தோன்றியவை: புறத்தோற்றச்
சிற்றினங்கள், இனப்பரிமாணச் சிற்றினங்கள்
புறத்தோற்றச்
சிற்றினம் அல்லது வகைப்பாட்டு சிற்றினம்
ஒரு தனித்தாவரம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளில்
ஒத்துக் காணப்பட்டு மற்ற குழுக்களிலிருந்து வேறுபட்டுக்காணப்பட்டால் அவை புறத்தோற்றச்
சிற்றினம் என அழைக்கப்படுகின்றன.
உயிரியசிற்றினம்
(தனிமைப்படுத்தப்பட்ட சிற்றினம்)
எர்னஸ்ட் மேயர் (1963) அவர்களின் கூற்றுப்படி, உயிரிய சிற்றினம் என்பது
இயற்கையாகவே தங்களுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்து கொள்வதால் மற்ற குழுக்களிலிருந்து
தனித்துக் காணப்படுகிறது.
இனப்பரிணாம
சிற்றினம்
இந்தக் கோட்பாடு மெக்லிட்ஜ் (1954), சிம்சன்
(1961), வைலி (1978) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
வைலியின் கூற்றுப்படி இனப்பரிணாம வழிச் சிற்றினம் என்பது ஒரு பரிணாமச் சிற்றினம். இது
மூதாதையரின் வழி தோன்றிய ஒரு தனி இனத்தோன்றலாகும். இது பிறவழித்தோன்றல்களிலிருந்து
அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அடையாளம், பரிணாமப் போக்கு, வரலாறு போன்றவற்றைக் கொண்டது.