தாவரவியல் - பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
பன்னாட்டுத்
தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் [ICBN]
ஒரு தாவரத்திற்குப் பெயரிட்டு அழைப்பது பெயரிடுதல் எனப்படும். இது அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டு சட்டத்தின் விதிகள், பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த அமைப்பானது உயிருள்ள மற்றும் அழிந்துபோன உயிரினங்களின் (தொல்லுயிர் எச்ச) பெயர்களைப்பற்றி விளக்குகிறது. கரோலஸ் லின்னேயஸ் ஆரம்பக்கால தாவரப் பெயரிடுதல் அடிப்படை விதிகளை 1751ல் வெளியிடப்பட்ட தன்னுடைய "ஃபிலாசோபியா பொட்டானிகா" என்ற புத்தகத்தில் முன்மொழிந்தார். தாவரப் பெயரிடுதல் விதிமுறைகளை A.P. டீ காண்டோல் 1813-ல் வெளியிட்ட தனது "தியரி எலிமெண்டரி டி லா பொட்டானிக்" ("Theorie elementary de la botanique") எனும் நூலில் வழங்கினார். தற்போது நடைமுறையில் உள்ள ICBN பெயரிடுதல் பற்றிய விதிமுறைகள் கரோலஸ் லின்னேயஸ், A.P. டீ காண்டோல் மற்றும் அவருடைய மகன் அல்போன்ஸ் டீ காண்டோல் ஆகியோர் உருவாக்கியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
தாவர
உலகத்தினை மற்ற உயிரினங்களிலிருந்து தனிமைப்படுத்தவும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காகவும்
ICBN தற்போது ICN எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் ஜுலை
2011 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் தாவரவியல் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.
ICN என்பது பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்குரிய சர்வதேசப் பெயர்சூட்டு சட்டமாக விளங்குகிறது.
ICN
கொள்கைகள்
பன்னாட்டுப் பெயர்சூட்டு சட்டம் கீழ்க்கண்ட 6 கொள்கைகளை
அடிப்படையாகக் கொண்டது.
1. தாவரவியல் பெயர் சூட்டுமுறை, விலங்குகள் மற்றும்
பாக்டீரியங்களின் பெயரிடுதல் முறைகளிலிருந்து தன்னிச்சையானது.
2. ஒரு வகைப்பாட்டு குழுவின் பெயர், பெயரீட்டு வகைகளின்
மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
3. வகைப்பாட்டு குழுவின் பெயர் வெளியீட்டல் (publication) முன்னுரிமையின் அடிப்படையில்
அமைகிறது.
4. ஒவ்வொரு வகைப்பாட்டு குழுவும் ஓர் குறிப்பிட்ட விளக்க
எல்லைப்படுத்துதல், நிலை மற்றும் தரத்தின் அடிப்படையில் ஒரே ஒரு சரியான பெயரைக் கொண்டிருக்கும்.
5. வகைப்பாட்டு குழுக்களின் அறிவியல் பெயர் அதன் மூலத்தோற்றத்தைப்
பொருட்படுத்தாமல் இலத்தீன் மொழியில் அமைய வேண்டும்.
6. பெயரிடல் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடாதவரை
பின்னோக்கி மாற்றியமைக்கக்கூடிய வரம்புடையவை.
பெயரிடல்
விதிகள் (Codes of Nomenclature)
ICN அமைப்பு தாவரங்களுக்குப் பெயரிடுதல் பற்றிய விதிகள்
மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை முறைப்படுத்தி உருவாக்கி உள்ளது. பன்னாட்டு தாவரவியல்
சட்டக்குழு 6 வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு இடங்களில் கூடுகிறது. அக்கூட்டத்தில்
பெயரிடுதலில் செய்யப்படும் மாற்றங்களின் முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் அதற்குரிய வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன.
2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 18வது பன்னாட்டு தாவரவியல்
மாநாட்டில் கீழ்க்கண்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
1. புதிய தாவரப் பெயர்களின் வெளியீடு, மின்னணு முறை
பதிப்பாக வெளியிட விதிகள் அனுமதியளிக்கின்றது.
2. 39-வது சட்ட விதிப்படி ஒரு புதிய பெயரின் விளக்கம்
அல்லது வரையறை இலத்தீன் மொழி மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வெளியிட அனுமதியளிக்கின்றது.
3. ஒரு பூஞ்சை ஒரே பெயர் மற்றும் ஒரு தொல்லுயிர் ஒரே
பெயர் என்ற முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே பூஞ்சையின் பாலிலா அமைப்பிற்கு
(அனாமார்ப்) என்ற பெயரும், பாலின அமைப்பிற்கு
(டீலியோமார்ஃப்) என்ற பெயரும் முன்னர் நடைமுறையில்
இருந்தது. அதேபோல ஒரே தொல்தாவரத்தின் பல பகுதிகள் பல பெயரிடப்பட்டு (மார்ஃபோடேக்ஸா) வந்தன, இவை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.
அனாமார்ஃப்
- பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை.
டீலியோமார்ஃப் - பூஞ்சையின் பாலினப்பெருக்க
நிலை.
4. இன்டெக்ஸ்
ஃபங்கோரம் மற்றும் பூஞ்சை அல்லது மைக்கோ வங்கி என அங்கீகரிக்கப்பட்ட சேமிப்புக்
களஞ்சியங்கள் இரண்டு உள்ளன. புதிய பூஞ்சை பற்றிய விளக்கங்கள் மற்றும் பெயர் பதிவு ஓர்
பூஞ்சையினைக் கண்டறிபவர் மூலம் பூஞ்சை களஞ்சியத்தில் பதியப்பட வேண்டும்.
19-வது பன்னாட்டு தாவரவியல் மாநாடு 2017ஆம் ஆண்டு சீனாவில்
ஷென்ஜென்
என்ற இடத்தில் நடைபெற்றது. இத்தாவரப் பன்னாட்டு மாநாட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள்
இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.
வட்டாரப்
பெயர்கள் (Vernacular Names) / பொதுப் பெயர்கள் (Common Names)
வட்டாரப் பெயர்கள் என்பது பொதுப் பெயர்கள் ஆகும். பொதுவாகத்
தாவரங்களுக்கு இப்பெயர்கள் விளக்கம் அளிக்கக்கூடியதாகவும், கவிதையின் மேற்கோள் அடிப்படையிலும்
பயன்படுத்தப்படுகின்றன. ஒரே தாவரத்திற்கு ஒன்று அல்லது பல பொதுப் பெயர்கள் வைத்து அழைக்கப்படுகின்றன.
இப்பெயர்கள் உள்ளூர் அல்லது வட்டார வழக்குப் பெயராக உள்ளன. இருப்பினும் அவை உலகம் முழுவதும்
பொதுவானவையல்ல. எடுத்துக்காட்டாக அல்பீஸியா
அமாரா. தென் தமிழகத்தில் உசிலை என்றும், வட தமிழகத்தில் துரிஞ்சி
என்றும் அழைக்கப்படுவதால் குழப்பம் ஏற்படுகிறது.
செயல்பாடு
உங்கள் வீட்டைச்சுற்றி காணப்படும் சுமார்
10 வெவ்வேறு தாவரங்களின் பொதுவான பெயர் மற்றும் அறிவியல் பெயரை எழுதுங்கள்.
அறிவியல்
பெயர்கள்/ தாவரவியல் பெயர்கள் (Scientific Names/ Botanical Names)
ஒவ்வொருவகைப்பாட்டு அலகும் ICN விதிகளின்படி (சிற்றினம், பேரினம், குடும்பம் ஆகியவை) ஒரு சரியான அறிவியல்
பெயரை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். ஒரு சிற்றினத்தின் அறிவியல் பெயரானது எப்பொழுதும்
இருசொற் பெயரை (binomial names) கொண்டிருக்க வேண்டும். இப்பெயர்கள் உலகம் முழுவதும்
பொதுவானவை. எடுத்துக்காட்டு: ஒரைசா சட்டைவா
L. என்பது நெல்லின் அறிவியல் பெயராகும்.
பல
சொல் பெயரிடுமுறை (Polynomial)
ஒரு தாவரத்தின் அடைமொழி வரையறையுடன் பல சொல் பெயரிடும்
முறை அமைந்திருந்தது. எடுத்துக்காட்டு :ரனன்குலஸ் காலிசிபஸ் ரெட்ரோஃபிளக்ஸிஸ் பெடன்குலிஸ்
ஃபால் காட்டிஸ் காலே எரக்டோ ஃபோலியஸ் காம்போசிடிஸ் (Ranunculus calycibus retroflexis
pedunculis falcatis caule ereto folius compositis). இதற்குக் கோப்பை வடிவ,
பின்வளைந்த புல்லிகளையுடைய, வளைந்த பூக்காம்பு, நிமிர்ந்த தண்டு மற்றும் கூட்டிலைகளை
உடையவையென்று பொருளாகும். மேலும் இம்முறை நினைவில் வைத்துக்கொள்ளவும், பயன்படுத்தவும்
மிகவும் கடினமாக இருந்தமையால் இரு சொற் பெயரிடல் முறை பயன்படுத்தப்பட்டது.
இரு
சொற் பெயரிடல்முறை (Binomial)
காஸ்பார்ட் பாஹின் முதன் முறையாக இரு சொற் பெயரிடல்
முறையை அறிமுகப்படுத்தினார். லின்னேயஸ் அதனை நடைமுறைப்படுத்தினார். ஒரு சிற்றினத்தின்
அறிவியல் பெயர் இரு சொற்களால் ஆனது. முதல் சொல் பேரினத்தையும் இரண்டாம் சொல் சிற்றினத்தையும்
குறிக்கும். எடுத்துக்காட்டு : மாஞ்சிஃபெரா
இண்டிகா (Mangifera indica). இதில்
மாஞ்சிஃபெரா என்ற முதற்சொல் பேரினத்தையும் இண்டிகா என்ற இரண்டாம் சொல் சிற்றினத்தையும்
குறிக்கிறது. தற்போது இம்முறை தான் நடைமுறையில் உள்ளது.
ஆசிரியர்
பெயர் சுட்டம் (Author citation)
ஒரு தாவரத்தை முதன் முதலில் முறையாக இனம் கண்டறிந்து,
பெயரிட்டு விவரித்த ஆசிரியரின் பெயரைச் சுருக்கமாக இருசொல் பெயரினைத் தொடர்ந்து குறிப்பிடுவதாகும்.
எடுத்துக்காட்டு: சொலானம் அமெரிக்கானம்
(= நைக்ரம்) L. (Solanum americanum (=nigrum) L. தாவரப் பெயரின் ஆசிரியர் பெயர் சுட்டம்
ஒருவராக அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவராக இருக்கலாம்.
ஓர் ஆசிரியர்
(Single author): ஓர் ஆசிரியர் மட்டும் தாவரத்தை முறையாக இனம் கண்டறிந்து
பெயரிட்டு, விளக்கம் அளித்தால் அவரே ஓர் ஆசிரியர் ஆவார் (Single author). இருசொல் பெயருக்கு இறுதியில் சுருக்கமாக அவர் பெயரைக்
குறிப்பிடப்பட வேண்டும். எடுத்துக்காட்டு: பித்தசெலோபியம்
சினரேரியம் பெந்த் (Pithecellobium cinerareum Benth).
பல ஆசிரியர்கள்
(Multiple authors): ஒரு தாவரமானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசிரியர்களால்
முறையாகப் பெயரிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் பெயரை இரு சொல்
பெயரின் இறுதியில் சுருக்கமாக எழுத வேண்டும். எடுத்துக்காட்டு: டெல்பினியம் விஸ்கோஸம் Hook f.et Thomson
(Delphimium viscosum Hook f.et Thomson).
ஆசிரியர்களின் பெயர்ச் சுருக்கம் கீழ்க்கண்டவாறு முறையாகப்
பின்பற்றப்பட்டு வருகின்றது.