Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | குடும்பம்: ஃபேபேசி (பட்டாணிக் குடும்பம்)

வகைப்பாட்டு நிலை, பொதுப்பண்புகள், பொருளாதார முக்கியத்துவம் - குடும்பம்: ஃபேபேசி (பட்டாணிக் குடும்பம்) | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  21.03.2022 10:30 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

குடும்பம்: ஃபேபேசி (பட்டாணிக் குடும்பம்)

அனைத்து வகையான வளரியல்புகளும் இக்குடும்பத்தில் காணப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூடுவிதைக் குடும்பங்கள்

இருவிதையிலைத் தாவர குடும்பங்கள் (Dicot Families)

1. குடும்பம்: ஃபேபேசி (பட்டாணிக் குடும்பம்)

வகைப்பாட்டு நிலை




 

பொதுப்பண்புகள்

பரவல் : ஃபேபேசி குடும்பம் 741 பேரினங்களையும் 20,200க்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் உள்ளடக்கியது. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

வளரியல்பு: அனைத்து வகையான வளரியல்புகளும் இக்குடும்பத்தில் காணப்படுகின்றன. பெரும்பாலும் குறுஞ்செடிகள் (குரோட்டலேரியா) தரைப்படர்ச்செடி, (இன்டிகோஃபெரா எனியஃபில்லா) நிமிர்செடிகள் (குரோட்டலேரியா வெருகோசா), புதர்ச்செடி (கஜானஸ் கஜான்), பின்னுக்கொடி (கிளைட்டோரியா), சிறுமரம் (செஸ்பேனியா) மரம் (பொங்கேமியா, டால்பெர்ஜியா, நீர்த்தாவரம் (ஆஸ்கினோமின் ஆஸ்பிரா / தக்கைத் தாவரம்), வன்கொடி (முக்குனா).


 

வேர்: ஆணிவேர்த்தொகுப்பு. பரவலாக வேர்முண்டுகளைக் கொண்டது. வேர்முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் லெகுமினோசாரம் போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

தண்டு : மென்மையான அல்லது கட்டைத்தன்மையுடைய தண்டு (டால்பெர்ஜியா). ஏறுகொடி அல்லது பின்னுகொடி (கிளைட்டோரியா).

இலை : தனிஇலை அல்லது ஒருசிற்றிலை (டெஸ்மோடியம் கேஞ்சடிகம்), இருசிற்றிலைக் கூட்டிலை (ஜோர்னியா டைஃபில்லா), முச்சிற்றிலைக் கூட்டிலை லாப்லாப் பர்புரியஸ், மாற்றிலையடுக்கமைவு, இலைக்காம்பு அதைப்புடையது, வலைப்பின்னல் நரம்பமைவுடையவை. நுனிச்சிற்றிலைகள் பைசம் சட்டைவம் (பட்டாணி) தாவரத்தில் பற்றுக்கம்பியாக உருமாற்றம் அடைந்துள்ளன.

மஞ்சரி : ரசீம் (=நுனிவளர் மஞ்சரி), (குரோட்டலேரியா வெருகோசா), பானிக்கிள் (டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா), இலைக்கோணத்தில் அமைந்த தனிமலர் (கிளைட்டோரியா டெர்னேஷியா).

மலர்: பூவடிச்செதிலுடையது, பூக்காம்புச் செதிலுடையது பூக்காம்புடையது, முழுமையானது, இருபால் மலர், ஐந்தங்கமலர், வேறுபட்ட இரு அடுக்குகளில் அமைந்துள்ளது. இருபக்கச்சீருடையது. சூலகமேல்மலர்கள் அல்லது சில சமயம் சூலகஞ்சூழ் (Perigynous) மலர்களைக் கொண்டது.

புல்லிவட்டம்: புல்லிகள் 5, பசுமையானது, குழாய் வடிவில் இணைந்தவை. நிலைத்த புல்லிவட்டத்தையுடையது. தொடு இதழ் அமைவு அல்லது தழுவு இதழமைவு கொண்டது. தனிப்புல்லி மலரின் அச்சுவிலகி காணப்படும்.

அல்லிவட்டம்: அல்லி இதழ்கள் 5, தனித்தவை, சமஅளவற்றவை, வண்ணத்துப்பூச்சி வடிவமைந்தவை, இறங்குதழுவு (Vexillary) இதழமைவு கொண்டவை, அல்லி இதழ்களின் அடிப்பகுதி குறுகியக்காம்புடன் காணப்படுகிறது. அச்சு நோக்கிய அல்லி பெரியது இது கொடியல்லி அல்லது வெக்ஸில்லம் என்று அழைக்கப்படும். பக்கவாட்டு அல்லிகள் இரண்டு கூர்மையான ஈட்டி போன்றும் வளைந்தும் காணப்படும். இவ்விரு அல்லிகளும் சிறகல்லி அல்லது ஆலே எனப்படும். அச்சு விலகி இரண்டு அல்லிகள் அடிப்புறம் மட்டும் இணைந்து காணப்படுகிறது. இவ்விரு அல்லிகளும் படகல்லி அல்லது காரினா எனப்படும். இவ்வல்லிகள் அடிப்புறம் இணைந்து மகரந்தத்தாள்களையும், சூலகத்தையும் மூடிப்பாதுகாக்கின்றன.


மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள்கள் 10, இருகற்றைகளையுடையது. பொதுவாக (9)+1 (கிளைட்டோரியாடெர்னேஷியா). மேற்புறத்திலுள்ள ஒரு மகரந்தத்தாள் மட்டும் தனியாக உள்ளது. ஆஸ்கினோமின் ஆஸ்பரா தாவரத்தில் மகரந்தக் கம்பிகள் இருகற்றைகளாக (5)+(5) இணைந்து காணப்படுகின்றன. ஒருகற்றை மகரந்தத்தாள்கள் சில தாவரங்களில் இருநீளம் இரு வடிவங்களில் காணப்படுகிறது. உதாரணமாகக் குரோட்டலேரியா வெருகோசா தாவரத்தில் 5 மகரந்தக் கம்பிகள் நீளமாகவும் மற்ற 5 மகரந்தக்கம்பிகள் நீளம் குறைந்து குட்டையாகவும் இருமட்டங்களில் காணப்படுகிறது. (5 மகரந்தப்பைகள் நீண்டு ஈட்டிபோன்றும், 5 மகரந்தப்பைகள் சிறியவையாகவும் நுனி மழுங்கியும் மாறுபட்டுக் காணப்படும்) மகரந்தப்பைகள் இரு மடல்களையுடையவை, மகரந்தப்பைகள் தாள் அடிஇணைந்த, நீள்வாக்கில் வெடிக்கக்கூடியவை.

சூலக வட்டம்: ஒரு சூலக இலையினாலானது, ஓர் அறையுடைய மேல்மட்டச் சூலகம். சூல்கள் பல இரு வரிசையில் மாறி மாறி விளிம்பு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத்தண்டு தனித்தது மற்றும் வளைந்தது. சூலகமுடி தட்டையாக அல்லது தூவிகளுடன் காணப்படுகின்றது.

கனி : ஃபேபேசியின் தனிச்சிறப்புக் கனியானது இருபுறவெடிகனியாகும் (Legume). சிலசமயங்களில் வெடியாக்கனியும், அரிதாக விதையிடைப்பிரிகனியும் (lomentum) (டெஸ்மோடியம்) காணப்படும். அராக்கிஸ் ஹைப்போஜியாவில் கனியானது புவிபுதைக் கனி (Geocarpic) அதாவது கருவுறுதலுக்குப் பின்பு சூலகப்பையின் காம்பு ஆக்குத்திசுவாக மாறி வளர்ச்சியடைந்து கருவுற்றசூலகப்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது, மண்ணிற்கு அடியில் கனி முதிர்ச்சியடைகிறது.

விதை: சிறுநீரக வடிவமுடையது, கருவூண் பெற்றோ அல்லது கருவூண் அற்றோ (பைசம் சட்டைவம்) காணப்படும்.

கிளைட்டோரியா டெர்னேஷியா

கலைச்சொற்களால் விளக்கம்

வளரியல்பு: பின்னுக்கொடி.

வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்தது மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது.

தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி.

இலை : ஒற்றைப்படை ஒருமடிக்கூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு, இலையடிச் செதிலுடையது,

வலைப்பின்னல் நரம்பமைப்புடையது. சிற்றிலைகள் காம்புடையவை. இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும்

அதைப்புடையன.

மஞ்சரி: கோண மலர்.

மலர்: பூவடிச் செதிலுடையது, பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புச் செதில்கள் அளவில் பெரியது. மலர்க்காம்புடையது, இரு பூவிதழடுக்குடையது, முழுமையானது, இருபால் மலர், ஐந்தங்கமலர், இருபக்கச்சீருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.

புல்லிவட்டம் : புல்லிகள் 5, இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைந்துள்ளது. தனிப்புல்லி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும்.

அல்லிவட்டம்: அல்லிகள் 5, வெண்மை அல்லது நீல நிறத்தாலானது. தனித்தது, ஒழுங்கற்றவை, வண்ணத்துப்பூச்சிவடிவில் அமைந்தவை, இறங்குதழுவு இதழமைவில் உள்ளன.

மகரந்தத்தாள் வட்டம் : மகரந்தத்தாள்கள் 10, இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகரந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும், 10-வது மகரந்தக்கம்பி தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன. மகரந்தப்பை ஈரறையுடையது, தாள் அடி இணைந்தவை, நீளவாக்கில் உட்புறமாக வெடிப்பவை.

சூலக வட்டம்: ஒற்றைச் சூலக இலையாலானது மேல்மட்ட சூலகம், ஒரு சூலக அறை. சூல்கள் பல விளிம்பு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது, சூலக முடி தூவிகளுடையது.

கனி : இருபுறவெடிகனி (legume)

விதை: சிறுநீரக வடிவிலானது, கருவூண் அற்றது. மலர் சூத்திரம்: 

ஃபேபேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம்


 

நீரிழிவிற்கான தீர்வு

கேலிகா அஃபிசினாலிஸ் (ஃபேபேசி குடும்பம்) தாவரத்தின் தண்டுப்பகுதிகள் டைமெதில் பைகுவானைட் என்கிற மெட்ஃபோர்மினைக் கொண்டுள்ளது. இது உலகெங்கிலும் நீரிழிவு நோய் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.



2016 பருப்பு வகைகளின் சர்வதேச ஆண்டு

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகளில் 2016 ஆம் ஆண்டை பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவித்துள்ளது. பருப்பு வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.




ஆப்ரஸ் ப்ரிக்ககேட்டோடிரிஸ் (குன்றி மணி) மற்றும் அடினான்தெரா பவோனியா /ஆனைக் குன்றிமணி (சீசல்பீனியேசி) தாவரங்களின் அழகிய விதைகள், மாலைகள் மற்றும் ஜெபமாலைகள் செய்யப் பயன்படுகிறது. தங்கத்தை எடைபோடவும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. மேலும் இதனை உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.


Tags : Systematic position, Diagnostic and General characters, Botanical description, Floral Formula, Economic Importance வகைப்பாட்டு நிலை, பொதுப்பண்புகள், பொருளாதார முக்கியத்துவம்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Family: Fabaceae (Pea family) Systematic position, Diagnostic and General characters, Botanical description, Floral Formula, Economic Importance in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : குடும்பம்: ஃபேபேசி (பட்டாணிக் குடும்பம்) - வகைப்பாட்டு நிலை, பொதுப்பண்புகள், பொருளாதார முக்கியத்துவம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்