Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  06.07.2022 07:19 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

‘தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படும் கிரேக்கத் தத்துவஞானி தியோஃப்ராஸ்டஸ் (பொ.ஆ.மு 372 - 287). சுமார் 500 தாவரங்களைத் தனது "டி ஹிஸ்டரியா ப்ளாண்டாரம்” எனும் நூலில் பெயரிட்டு, விவரித்தார்.

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினைக் கற்போர்

• வகைப்பாட்டிலிருந்து குழுமப்பரிணாம் வகைப்பாட்டினை வேறுபடுத்தவும்,

• ICN கொள்கைகள், பெயரிடுதலுக்கான கொள்கைகள், மற்றும் குறீயிடுகளை விவரிக்கவும்,

• உள்நாட்டு மற்றும் பன்னாட்டு உலர்தாவர சேமிப்பு நிலையங்களை ஒப்பிடவும்,

• வகைப்பாட்டியலில் புறஅமைப்பியல், உள்ளமைப்பியல், செல்லியல், DNA மரபணு வரிசையாக்கம் ஆகியவற்றின் பங்கினை உணரவும்,

• ஃபேபேசி, சொலானேசி மற்றும் லிலியேசி குடும்பத்தாவரங்களின் சிறப்புப் பண்புகளை விளக்கவும் இயலும்.

 

பாட உள்ளடக்கம்

5.1 வகைப்பாட்டியலும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலும்

5.2 வகைப்பாட்டுப் படிநிலைகள்

5.3 சிற்றினக் கோட்பாடுகள் - புறத்தோற்றவழி, உயிரியவழி, இனப்பரிணாமவழி

5.4 பன்னாட்டுத் தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம்

5.5 வகைப்பாட்டுத் துணைக்கருவிகள்

5.6 தாவரவியல் பூங்காக்கள்

5.7 உலர்தாவர வகைமாதிரி - தயாரிப்பும், பயன்களும்

5.8 தாவரங்களின் வகைப்பாடு

5.9 வகைப்பாட்டின் அவசியம்

5.10 வகைப்பாட்டின் வகைகள்

5.11 வகைப்பாட்டின் நவீன அணுகுமுறைகள்

5.12 கிளையியல் வகைப்பாடு

5.13 தேர்ந்தெடுத்த மூடுவிதைத்தாவரக் குடும்பங்கள்

 

புவியில் மனிதனின் முதன்மைத் துணையாக இருப்பவை தாவரங்கள் ஆகும். உணவு, ஆற்றல், இருப்பிடம், ஆடை, மருந்துகள், பானங்கள், ஆக்ஸிஜன் மற்றும் அமைதியான அழகான சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஆதாரங்களாகத் தாவரங்கள் விளங்குகின்றன. மனிதனின் வகைப்படுத்தும் செயல் உயிரினங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அன்றாட வாழ்விற்குத் தேவையான உணவு, ஆடைகள், புத்தகங்கள், விளையாட்டுக்கள், வாகனங்கள் ஆகியவற்றை இனங்கண்டறிந்து, விளக்கத்துடன் பெயர் சூட்டி வகைப்படுத்துகிறான். பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரு வகைப்பாட்டியலனாக அவன் திகழ்கிறான்.

தாவர வகைப்பாட்டியல் முற்காலம் முதல் இக்காலம் வரை பல்வேறு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. மனிதன் நிலைத்து வாழ ஆரம்பித்தது முதல் தாவரங்களைப் பற்றிய தேவையை உணர்ந்ததன் காரணமாகத்தாவரங்களை உணவு, உறையுள் மற்றும் நோய் குணமாக்கும் காரணியாகப் பயன்படுத்தத் துவங்கினான்.

‘தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படும் கிரேக்கத் தத்துவஞானி தியோஃப்ராஸ்டஸ் (பொ.ஆ.மு 372 - 287). சுமார் 500 தாவரங்களைத் தனது "டி ஹிஸ்டரியா ப்ளாண்டாரம்” எனும் நூலில் பெயரிட்டு, விவரித்தார். பின்னர் (பொ.ஆ.பி 62-127) டயஸ்கோரிடஸ் எனும் கிரேக்க மருத்துவர், சுமார் 600 மருத்துவத்தாவரங்களை பட விளக்கங்களுடன் தனது 'மெட்டிரியா மெடிக்கா' - வில் விளக்கியிருந்தார். பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் வகைப்பாட்டியலில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண முடிந்தது. அன்ட்ரியா சிஸல்பினோ, ஜான் ரே, டூர்ன்ஃபோர்ட், ஜீன் பாஹின் மற்றும் கேஸ்பார்ட் பாஹின் ஆகியோர் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

லின்னேயஸ் தனது ஸ்பீசிஸ் பிளாண்டாரம்’ (1753) எனும் நூலில் இரு பெயரிடல் முறைக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார்.

வகைப்பாட்டியல் என்பது பாரம்பரியப் புற அமைப்பியல் சார்ந்த துறை எனக்கருதப்படாமல் தற்போது அதிகச் செயல்பாடுமிக்க மற்றத்துறைகளோடு தொடர்புடைய ஒரு பிரிவாக மாற்றம் பெற்றுள்ளது. தாவரவியலின் மற்ற பிரிவுகளான செல் அறிவியல், இயங்கியல், உயிர்வேதியியல், சூழ்நிலையியல், மருந்தியல் உயிரி தொழில்நுட்பவியல், மூலக்கூறு அறிவியல், உயிரித் தகவலியல் ஆகியவற்றையும் வகைப்பாட்டில் பயன்படுத்தியுள்ளது. உயிர்பன்மம், காடுகள் பராமரித்தல், இயற்கை வளங்களைத் தொடர்ந்து பயன்படுத்துதல் ஆகியவற்றை அறிய உதவுவதோடல்லாமல் இயற்கைச்சூழல் மீட்பிற்கும் உதவுகிறது.

 

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப்பரிணாம வகைப்பாட்டியலுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள்.


வகைப்பாட்டியல்

• உயிரினங்களைப் பல்வேறு வகைப்பாட்டு படிநிலை அலகுகளாக (taxa) வகைப்படுத்தும் பிரிவு.

விளக்கமளித்தல், இனங்கண்டறிதல், உயிரினங்களைப் பதப்படுத்துதல் போன்ற செய்முறைகளைக் கவனிக்கக் கூடியது.

வகைப்படுத்துதல் + பெயரிடுதல் = வகைப்பாட்டியல். 

குழுமப்பரிணாம வகைப்பாட்டியல்

வேறுபட்ட சிற்றனங்களைப்பற்றி படிக்கக்கூடிய ஒரு பரந்த உயிரியல் பிரிவு.

வகைப்பாட்டியலுடன் சேர்த்துப் பரிணாம வரலாறு மற்றும் குழுமப்பரிணாமத் தொடர்புகளைப் பற்றி அறியக் கூடிய பிரிவு.

வகைப்படுத்துதல் + குழுமப்பரிணாமம் = குழுமப்பரிணாம வகைப்பாட்டியல்


Tags : Botany தாவரவியல்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Taxonomy and Systematic Botany Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்