தாவரவியல் - வகைப்பாட்டு துணைக்கருவிகள் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
வகைப்பாட்டு துணைக்கருவிகள் (Taxonomic Aids):
வகைப்பாட்டியலைப் பற்றி அறிய உதவும் முக்கியத் துணைக்கருவிகள் வகைப்பாட்டு துணைக்கருவிகள் எனப்படும். வகைப்பாட்டு கருவிகள் என்பது உயிரினங்களை இனம் கண்டறிய, வரிசைப்படுத்த உதவும் சில சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள், வழிமுறைகள், செயல் நுட்பங்கள் போன்றவை ஆகும். உயிரியல் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் இவை பயன்படுகின்றன. தாவரங்களை முறையாக இனங்கண்டறியவும், அவற்றுடன் உள்ள உறவுமுறையைக் கண்டுபிடிப்பதற்கும் இவை பயன்படுகின்றன. வகைப்பாட்டு திறவுகள், தாவரப் பட்டியல்கள், தாவரத் தொகுப்புக்கள், தனிவரைவு நூல்கள், உலர்த்தாவரத் தொகுப்புகள், தாவரவியல் தோட்டங்கள் யாவும் வகைப்பாட்டு கருவிகளாகப் பயன்படுகின்றன.
1. வகைப்பாட்டு திறவுகள் (Keys)
அறிமுகமில்லாத தாவரங்களைச் சரியாக இனம் கண்டறிய வகைப்பாட்டு திறவுகள் பயன்படுகின்றன. இந்த வகைப்பாட்டு திறவு, நிலையான மற்றும் நம்பத்தகுந்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் திறவு கவட்டுக் கிளைத்தல் திறவு ஆகும். இது இரண்டு முரண்பட்ட கூற்றுக்களைக் கொண்டது. இந்த முரண்பாட்டு கூற்றுக்கள் ‘ஜோடிகள்’ எனப்படும் (Couplets) ஒவ்வொரு கூற்றும் ‘துப்பு’ (lead) எனப்படும். திறவு கூற்றுக்களைப்பயன்படுத்தி சரியான தாவரம் அடையாளம் காணப்படுகிறது.
தாவரப்பெயர் அறிய மற்றொரு வகை பல்வழித் திறவு முறை (Polyclave) என அழைக்கப்படுகிறது. அவைகளில் பல்வேறு வகை பண்புகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளன.
இதனைப் பயன்படுத்துபவர் தங்களது மாதிரியோடு பொருந்துபவைகளை தேர்வு செய்தலாகும். இவை கணினி மூலம் செயல் படுத்தப்படுகிறது.
ICN கொள்கைகள்
பன்னாட்டுப் பெயர்சூட்டு சட்டம் கீழ்க்கண்ட 6 கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
1. தாவரவியல் பெயர் சூட்டுமுறை, விலங்குகள் மற்றும் பாக்டீரியங்களின் பெயரிடுதல் முறைகளிலிருந்து தன்னிச்சையானது.
2. ஒரு வகைப்பாட்டு குழுவின் பெயர், பெயரீட்டு வகைகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
3. வகைப்பாட்டு குழுவின் பெயர் வெளியீட்டல் (publication) முன்னுரிமையின் அடிப்படையில் அமைகிறது.
4. ஒவ்வொரு வகைப்பாட்டு குழுவும் ஓர் குறிப்பிட்ட விளக்க எல்லைப்படுத்துதல், நிலை மற்றும் தரத்தின் அடிப்படையில் ஒரே ஒரு சரியான பெயரைக் கொண்டிருக்கும்.
5. வகைப்பாட்டு குழுக்களின் அறிவியல் பெயர் அதன் மூலத்தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் இலத்தீன் மொழியில் அமைய வேண்டும்.
6. பெயரிடல் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடாதவரை பின்னோக்கி மாற்றியமைக்கக்கூடிய வரம்புடையவை.