தாவரவியல் - செயற்கை வகைப்பாட்டுமுறை - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany
தாவரத் தொகுப்புகள் மூன்று வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை
(1) செயற்கை வகைப்பாட்டு முறை
(2) இயற்கை வகைப்பாட்டுமுறை
(3) இனப்பரிணாம வழி வகைப்பாட்டுமுறை
ஆகியனவாகும்.
1. செயற்கை வகைப்பாட்டுமுறை (Artificial system of classification)
"வகைப்பாட்டியலின் தந்தை" என போற்றப்படும் கரோலஸ் லின்னேயஸ் (1707 - 1778) ஒரு சிறந்த ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலாளர். இவர் 1753-ம் ஆண்டில் "ஸ்பீசிஸ் பிளாண்டாரம்" எனும் நூலில் செயற்கை முறை வகைப்பாட்டினை விளக்கினார். இதில் 7,300 சிற்றினங்களை விவரித்து 24 வகுப்புகளாகப் பட்டியலிட்டுள்ளார். இவர் தம் வகைப்பாட்டில் மகரந்தத்தாள்களின் எண்ணிக்கை, இணைவு, நீளம் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தினார். மேலும், சூலக இலைகளின் சிறப்புப் பண்புகளின் அடிப்படையில் வகுப்புகளைப் பலதுறைகளாகப் பிரித்தார். எனவே இவ் வகைப்பாடு "பாலின வழி வகைப்பாடு (Sexual system of classification)" என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வகைப்பாடு செயற்கை முறை கோட்பாடாக இருந்தாலும், எளிமையானதாகவும் தாவரங்களை எளிதில் அடையாளம் காண்பதற்கும் பெருமளவு உதவியதால் லின்னேயஸின் இறப்புக்குப் பின்னரும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்தது. நடைமுறையில் இருந்த பிறவகைப்பாடுகளைவிட இவ்வகைப்பாடு முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், பின்வரும் காரணங்களால் இது தொடர்ந்து பின்பற்றப்படவில்லை.
1. முற்றிலும் தொடர்பற்ற தாவரங்கள் ஒரே பிரிவின் கீழும்,
நெருங்கிய தொடர்புடைய தாவரங்கள் தனித்தனிப் பிரிவுகளின் கீழும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
எடுத்துக்காட்டாக a. ஒருவிதையிலைத் தாவரத்தொகுப்பைச் சேர்ந்த ஜிஞ்ஜிபெரேசி தாவரங்களும்,
இருவிதையிலைத் தாவர வகுப்பைச் சேர்ந்த அனகார்டியேசி தாவரங்களும், ஒரே ஒரு மகரந்தத்தாளைப்
பெற்றிருப்பதால் மோனாண்டிரியா என்ற ஒரே வகுப்பின் கீழ் வகைப்பட்டுத்தப்பட்டுள்ளன.
b. மகரந்தத் தாள்களின் எண்ணிக்கை அடிப்படையில் ப்ரூனஸ் எனும் பேரினம் கேக்டஸ் குழுமத்துடன் சேர்த்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகைப்பாட்டில் தாவரங்களை, அவற்றிற்கிடையே காணப்படும் இயற்கை அல்லது இனப்பரிணாம அடிப்படையில் வகைப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
லின்னேயஸ் அவரது "ஸ்பீசிஸ் பிளாண்டாரம்" (1753) என்ற நூலில் மகரந்தத் தாள் மற்றும் பால்பண்புகளின் அடிப்படையில் 24 வகுப்புகளாக வகைப்படுத்தியுள்ளார்