பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - பல்வேறு முகவர்கள் மூலம் கனிகள் மற்றும் விதைகள் பரவுதல் | 12th Botany : Practicals
பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்
சோதனை எண்7: பல்வேறு முகவர்கள் மூலம் கனிகள் மற்றும் விதைகள் பரவுதல்
நோக்கம்: கனிகள்
மற்றும் விதைகள் பரவுதலில் உதவும் முகவர்களைப் பற்றி அறிதல் மற்றும் அடையாளம் காணுதல்.
கொள்கை: ஒரு
தாய் தாவரத்திலிருந்து பல்வேறு தூரத்திற்குக் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலே விதை
மற்றும் கனி பரவுதல் என்றழைக்கப்படுகிறது. இது காற்று, நீர் மற்றும் விலங்குகள் போன்ற
சூழ்நிலையியல் காரணிகளின் உதவியுடன் நடைபெறுகிறது.
தேவையானவை: டிரைடாக்ஸ், தேங்காய் மற்றும் நாயுருவி (அக்கிரான்தஸ்), கத்தி, இடுக்கிகள், பெட்ரி தட்டுகள், கை லென்ஸ் முதலியன.
அ. காற்றின் மூலம் பரவுதல் - (எடுத்துக்காட்டு: டிரைடாக்ஸ்)
• கனிகள் லேசானவை எனவே அவற்றைக் காற்று சுமந்து
செல்லக்கூடிய வகையில் உள்ளது.
• கனிகள் நுண்ணியவை, மிகமிகச் சிறியவை, தட்டையான
வெளிஉறையினைக் கொண்டுள்ளன.
• கனிகள் பரவுதலில் இறகு வடிவ இணையுறுப்புகள்
(பாப்பஸ்) மிதக்கும் திறனை அதிகரித்து உயர்ந்த இடங்களை அடையச் செய்கின்றன.
ஆ. நீர் மூலம் பரவுதல் - (எடுத்துக்காட்டு: தேங்காய்)
• நீர் மூலம் பரவுதலுக்காகக் கனிகளின் வெளியுறை
மிதப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
• தேங்காய் நார்களைக் கொண்ட நடுத்தோல் உடையது.
ஆகையினால் தேங்காய் எளிதில் ஓடும் நீரில் அடித்துச் செல்லக்கூடியவை.
இ. விலங்குகள் மூலம் பரவுதல் - (எடுத்துக்காட்டு: அக்கிரான்தஸ்)
•கனிகள் விலங்குகள் மூலம் பரவுதலுக்கு ஏற்ப
அதன் மேற்பகுதியில் கொக்கி, முட்கள், கடின இழைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
• அக்கிரான்தஸின் (நாயுருவியின்) கூர்மையான
முனைகளையுடைய கனிகள் விலங்குகளின் மேல் ஒட்டிக் கொண்டு, ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு
எடுத்துச் செல்லப்படுகின்றன.