பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - தாவரங்களில் இயற்கையாக நடைபெறும் தழைவழி இனப்பெருக்க முறைகள் | 12th Botany : Practicals
பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்
சோதனை எண் 4: தாவரங்களில் இயற்கையாக நடைபெறும் தழைவழி இனப்பெருக்க முறைகள்
நோக்கம்
:
தாவரங்களில் இயற்கையாக நடைபெறும் தழைவழி இனப்பெருக்க முறைகளைக் கண்டறிதல்.
கொள்கை
:
இயற்கையாக நடைபெறும் தழைவழி இனப்பெருக்கம் பாலிலா இனப்பெருக்க முறைகளில் ஒன்றாகும்.
இதில் தழைவழி மொட்டிலிருந்து புதிய தாவரம் உருவாகிறது. வேர், தண்டு, இலை போன்ற பகுதிகளிலிருந்து
மொட்டுகள் தோன்றலாம். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவை தாய்த் தாவரத்திலிருந்து பிரிந்து
புதிய தாவரங்களாக வளர்கின்றன.
தேவையானவை: ஜிஞ்சிபெர்,
கிரைசாந்திமம், பிரையோஃபில்லம் போன்ற தாவரங்களின் புதிய / பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்.
மாணவர்களை அருகிலுள்ள காய்கறி சந்தைக்குச் சென்று வேர், தண்டு, இலைகளிலிருந்து பெறப்படும் காய்கறிகளைக் கண்டறியச் சொல்லி, அவற்றில் தழைவழி இனப்பெருக்கம் மூலம் இனப்பெருக்கமடையும் தாவரங்களைக் கண்டறியச் சொல்லவும்.
அ. தரைகீழ்த் தண்டின் மூலம் தழைவழி இனப்பெருக்கம் அடைதல் - மட்டநிலத்தண்டு
• ஜிஞ்ஜிபெர் (இஞ்சி) தரைகீழ்த் தண்டான மட்டநிலத்தண்டாகும்.
• இது தரைப்பரப்பிற்கு இணையாக வளரும் தடித்த
தரையடித் தண்டாகும். உணவுப் பொருட்களைச் கணுவிடை சேர்த்து வைப்பதால் தடித்துக் காணப்படும்.
• நுனி மொட்டுகள் மேல் நோக்கி வளர்ந்து தண்டுப் பகுதியையும் மலர்களையும் உருவாக்குகின்றன. பக்கவாட்டு மொட்டுகள் வளர்ந்து புதிய மட்டநிலத்தண்டை உருவாக்குகின்றன.
ஆ. தரையொட்டிய தண்டின் மூலம் தழைவழி இனப்பெருக்கம் - தரைகீழ் உந்துதண்டு
• கிரைசாந்திமத்தின் தரைகீழ் உந்துதண்டு தழைவழி
இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
• தரைகீழ் உந்துதண்டு சற்றுச் சாய்வாக வளர்ந்து
மண்ணைவிட்டு வெளியே வந்து புதிய தாவரத்தை அல்லது கிளைகளை உருவாக்குகிறது.
• தரைகீழ் உந்துதண்டு கணுக்களையும், கணுவிடைப்
பகுதிகளையும் கொண்டிருக்கும். கணுவின் மேற்பகுதியில் கோண மொட்டுகளையும், கீழ்ப்பகுதியில்
வேற்றிட வேர்களையும் தோற்றுவிக்கின்றன.
கண்டறியும் பண்புகள்
• பிரையோஃபில்லத்தில் இலைகளின் விளிம்புகளில்
மாற்றிட மொட்டுகள் தோன்றுகின்றன. இவை இலை மொட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
• இலை மொட்டுக்களிலிருந்து தனிப்பட்ட தாவரங்கள்
உருவாகின்றன.
• இலைகள் கீழே விழுந்த பின், இலை மொட்டுகள்
மண்ணில் வேர்களை உருவாக்கி, தனித் தாவரங்களாக வளர்கின்றன.