சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் - எருக்கின் (கேலோடிராபிஸ்) பொலினியத்தை தனிமைப்படுத்திச் சமர்ப்பித்தல் | 12th Botany : Practicals
சோதனைகள்
சோதனை எண் 19: எருக்கின் (கேலோடிராபிஸ்) பொலினியத்தை தனிமைப்படுத்திச் சமர்ப்பித்தல்
வட்டத்தட்டு எருக்கின் மலரிலிருந்து பொலினியத்தை
தனிமைப்படுத்தி அதன் அமைப்பு மற்றும் மகரந்தச்சேர்க்கை இயங்கு முறையை உற்றுநோக்கல்.
எருக்கில் மகரந்தத்தாளின் ஒவ்வொரு மகரந்தமடலிலும்
உள்ள மகரந்தத்துகள் ஒரு திரளாக இணைந்து பொலினியத்தை உருவாக்குகின்றன.
எருக்க மலர்கள், கைப்பிடி கொண்ட ஊசி, எளிய
நுண்ணோக்கி, கண்ணாடித் தகடு, பிளேடு, கிளிசரின், கண்ணாடி வில்லை , கத்திரிக்கோல்.
முதிர்ந்த எருக்க மலரை எடுத்துக் கொள்ளவும்.
மலரின் பாகங்களை உற்றுநோக்கிப் புல்லிவட்டம், அல்லிவட்டம் ஆகியவற்றைக் கத்திரிக்கோலால்
வெட்டி நீக்கவும். ஐங்கோண வடிவச் சூலகத்தட்டைக் கண்டறிந்து சூலகமுடியுடன் பொலினியங்கள்
இணைந்துள்ள கோணங்களில் ஊசியை நுழைத்துப் பொலினியங்களைப் பிரித்தெடுத்துத் தூய கண்ணாடித்
தகட்டின் மீது வைக்கவும். இதனைக் கிளிசரினால் பொதித்து கண்ணாடி வில்லையால் மூடவும்.
எளிய நுண்ணோக்கியில் வைத்து உற்றுநோக்கி, கண்டறிந்ததைப் பதிவு செய்யவும்.
எருக்கின் மகரந்தத்தாள்கள் பொலினியத்தை உருவாக்குகின்றன.
பொலினியங்கள் சுரப்புத் தன்மையுள்ள கார்பஸ்குலம் எனும் ஒட்டும் தட்டில் நூல் போன்ற
ரெட்டினாகுலத்தின் மூலம் இணைந்துள்ளன. இந்த மொத்த அமைப்பும் ஆங்கில எழுத்து தலைகீழ்
Y வடிவில் உள்ளது. இதற்கு டிரான்சிலேட்டர் என்று பெயர். ஒட்டும் தட்டு மகரந்தச் சேர்க்கையாளரின்
(தேனீ அல்லது வண்ணத்துப்பூச்சி) கால்களில் ஒட்டிக் கொண்டு வேறு மலரின் சூலகமுடியை அடைந்து
மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.
எருக்கின் பொலினிய அமைப்பு மகரந்தச்சேர்க்கை
சிறந்த முறையில் நடைபெற உதவுகிறது.