பயன்கள், தோற்றம் மற்றும் விளையுமிடம், தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - ஒப்பனைப் பொருட்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
ஒப்பனைப் பொருட்கள்
தென்னிந்தியாவில் பாரம்பரியமாக மக்கள் தங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பிற்கு மஞ்சள், பாசிப்பயறு பொடி, மருதாணி , சிகைக்காய், உசிலைப் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் இவை பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்பட்டவை. ஒப்பனைப் பொருட்கள் இன்று அதிக வணிக மதிப்பைப் பெற்றுள்ளதால், இவை வேதிப்பொருள் சார்ந்த ஆலைப் பொருட்களாகிவிட்டன. தனிமனிதப் பராமரிப்பு சேவைகளை வழங்குவது ஒரு முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. சமீபகாலமாக வேதிப்பொருட் சார்ந்த ஒப்பனைப் பொருட்களின் அபாயங்களை மக்கள் உணர்ந்து இயற்கைப் பொருட்களுக்குத் திரும்பி வருகின்றனர். இந்தப் பகுதியில் ஒப்பனைத் தொழில்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியத் தாவரமான சோற்றுக்கற்றாழையைப் பற்றி காண்போம்.
தாவரப்பெயர்: அலோ
வீரா
குடும்பம்: அஸ்ஃபோடெலேசி
(முன்பு லிலியேசி)
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இது சூடானைப் பிறப்பிடமாகக் கொண்டது. இராஜஸ்தான்,
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெருமளவில்
பயிரிடப்படுகிறது.
‘அலாயின் (குளுக்கோசைடுகளின் கலவை) மற்றும் இதன் களிம்பு தோலுக்கு ஊட்டமளிக்கக் கூடியது. குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைப் பெற்றுள்ளதால் களிம்புகள், பூச்சுகள், ஷாம்பு, முகச்சவர களிம்புகள் மற்றும் அதையொத்தபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவதற்கும் இது பயன்படுகின்றது. கற்றாழை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குழைவுத்தன்மை, பாக்டீரிய எதிர்ப்பி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பி , பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
பெர்ஃபியூம் (perfumes) என்ற சொல் பெர் (வழி)
மற்றும் ஃபியூம்ஸ்' (புகை) எனப் பொருள்படும் இரு இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது.
இச்சொல் புகைவழி எனப்படும். இது சமய விழாக்களில் நறுமணக் கட்டைகளை எரிக்கின்ற பழம்பெரும்
மரபைக் குறிக்கின்றது. மக்கள் சுயச் சுகாதாரத்தைப் பற்றிக் குறைவாக உணர்ந்திருந்த ஆரம்ப
நாட்களில், உடல் துர்நாற்றத்தை மறைக்க மட்டுமன்றி, கிருமி நாசினியாகவும் நறுமண எண்ணெய்கள்
செயல்பட்டன. குளிப்பதற்கும், உடலைத் தூய்மைப்படுத்தவும் நறுமணத்தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மணமுள்ள, எளிதில் ஆவியாகும் தன்மையுள்ள எண்ணைகளிலிருந்து
நறுமணத்தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் இலைகள் (கறிவேப்பிலை, புதினா),
மலர்கள் (ரோஜா, மல்லிகை), பழங்கள் (சிட்ரஸ், ஸ்டிராபெர்ரி), மரம் (சந்தனக்கட்டை, யூக்கலிப்டஸ்)
போன்ற பல்வேறு தாவரப்பாகங்களில் காணப்படுகின்றது.
மல்லிகை (Jasmine)
தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்
குடும்பம்: ஓலியேசி
தோற்றம் மற்றும் விளையுமிடம்
மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில்
ரோஜாவிற்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது. வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஜாஸ்மினம்
கிராண்டிஃபுளோரம் வடமேற்கு இமயமலை பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. தமிழ்நாட்டில்
மதுரை, கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை ஆகியவை மல்லிகை வளர்ப்பு மையங்களாகும். இம்மலரின்
புல்லி, அல்லியின் மேல்புறத்தோல், மற்றும் கீழ்புறத்தோல்களில் நறுமண எண்ணெய் உள்ளது.
ஒரு டன் மல்லிகை மலரிலிருந்து 2.5 முதல் 3 கிலோ நறுமண எண்ணெய் பெறப்படுகிறது. இது பூவின்
மொத்த எடையில் 0.25 முதல் 3% வரை இருக்கும்.
மல்லிகை மலர்கள் இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே
வழிபாடுகள், சடங்குகள் (ceremonial purpose), தூபங்கள், புகையூட்டிகள், வாசனையூட்டப்பட்ட
முடித் தைலங்கள், ஒப்பனைப் பொருட்கள், சோப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மல்லிகை எண்ணெய் அதன் சுகமான, இதம் தரக்கூடிய, மனச்சோர்வை நீக்குகின்ற பண்புகளால் மதிப்பு
வாய்ந்த முக்கிய எண்ணெயாகக் கருதப்படுகிறது. மல்லிகை எண்ணெய் பிற வாசனை திரவியங்களுடன்
நன்றாகக் கலக்கின்ற தன்மையுடையதால் நவீன நறுமணத்தைலங்கள், ஒப்பனைப் பொருட்கள், காற்று
மணமூட்டி (air freshners), வியற்வை குறைப்பி, முகப்பவுடர், ஷாம்பு, நாற்றம் நீக்கி
(deodorant) போன்ற பொருட்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மதுரை மல்லி
மதுரையின் பெருமையான மதுரை மல்லி உலகளாவிய தனித்துவமான புகழைக்
கொண்டுள்ளதால் அதற்கு இந்தியப் புவிசார் குறியீடு பதிவகத்தால் (Geographical
indication Registry of India) புவிசார் குறியீட்டு முத்திரை (GI) வழங்கப்பட்டது. மதுரை
மல்லியில் தடித்த இதழ்களையும், இதழ்களின் உயரத்துக்குச் சம அளவான காம்புகளையும், ஜாஸ்மைன்
மற்றும் ஆல்பா டெர்பினியால் போன்ற வேதி பொருட்கள் இருப்பதால் தனித்துவமான நறுமணத்தினைக்
கொண்டுள்ளது. இத்தகைய பண்பால் மதுரை மல்லி வேறு இடங்களிலுள்ள மல்லிகையிலிருந்து வேறுபடுகிறது.
மதுரை மல்லி "மைசூர் மல்லிகைக்குப் பிறகு புவிசார் குறியீடுவழங்கப்பெற்ற இரண்டாவது
மல்லிகை இரகமாகும்.
தாவரவியல்
பெயர்: ரோசா x டாமசீனா
குடும்பம்: ரோசேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
ரோசா x டாமசீனா மத்தியக் கிழக்குப் பகுதியைப்
பிறப்பிடமாகக் கொண்டது. இராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்,
கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை நறுமண ரோஜா வளர்க்கும் முக்கிய மாநிலங்களாகும்.
ரோஜா எண்ணெய் பழமையானதும், அதிக விலை உயர்ந்ததுமான நறுமணத்தைலங்களில் ஒன்றாகும். மலர்
இதழின் அகப்பகுதியிலுள்ள புறத்தோலில் எண்ணெய் செல்கள் செறிந்துள்ளன. 1000 கிராம் மலர்களிலிருந்து
சராசரியாக 0.5 கிராமுக்குச் சற்றுக் குறைவாக எண்ணெய் கிடைக்கிறது.
பயன்கள்
ரோஜா எண்ணெய் பெரும்பாலும் வாசனைத் திரவியங்கள்,
வாசனை சோப்புகள், மென்பானங்கள், மதுபானம், சில புகையிலை வகைகள், குறிப்பாக மெல்லும்
மற்றும் புகைக்கும் புகையிலை ஆகியவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பினைல் எத்தில்
ஆல்கஹால் மற்றும் பிற கலவைகள் சேர்ந்த பன்னீர் (rose water) இனிப்பு வகைகள், நீர்ப்பாகுகள்
மற்றும் மென்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் பன்னீர் கண் திரவங்கள்,
கண் கழுவிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுபநிகழ்வுகளில் விருந்தினர்களை
வரவேற்க அவர்கள் மீது தெளிக்கப்படுகின்றன.
தாவரவியல்
பெயர்: சான்டலம் ஆல்பம்
குடும்பம்:
சான்டலேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
சந்தன மரம் தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக்
கொண்டது. இந்தியாவில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கைச் சூழலில் வளரும் சந்தன
மரங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இதன் வைரக்கட்டையில் சான்டலால் உள்ளதால்
மணமுள்ளதாக உள்ளது. இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. மரச் சீவல்களிலிருந்து
பெறப்படும் எண்ணெய் 4 - 5% வேறுபடுகின்றது. வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்
(உலர் எடையில் 10%) மரச்சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெயை விட (உலர் எடையில் 4
- 5%) அதிகமாகும்.
சந்தன எண்ணெயின் சிறப்பாகக் கலக்கும் பண்பால்
மற்ற வாசனை திரவியங்களில் மதிப்பு வாய்ந்த நிலைநிறுத்தியாக (fixative) பயன்படுகிறது.
சந்தன எண்ணெயை நறுமணச் சோப்புகள், முகப் பவுடர், முகப்பூச்சுகள், முடி எண்ணெய், கைப்பூச்சு,
நறுமணத்தைலங்கள் மற்றும் மருந்தக ஆலைகள் 90%-ற்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறன.