பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - சர்க்கரைகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
சர்க்கரைகள் (Sugars)
கரும்பின் தண்டை சுவைக்கும்போதும், பீட்ரூட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிடும் போதும், பதநீரைப் பருகும்போதும் இனிப்புச் சுவையை உணர்ந்திருப்பீர்கள். இது அவற்றில் வெவ்வேறு விகிதங்களில் காணப்படுகின்ற சர்க்கரையைப் பொறுத்தது. சர்க்கரை என்பது உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படுத்தக்கூடிய இனிப்புச் சுவையுடைய , கரையக்கூடிய கார்போஹட்ரேட்டின் பொதுவான பெயராகும். கரும்பு மற்றும் பனையில் காணப்படுகின்ற சர்க்கரை திறம்படப் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்கப் பயன்படுகின்றது.
தாவரவியல்
பெயர்: சக்காரம் அஃபிசினாரம்
குடும்பம்: போயேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
தற்போது பயிரிடப்படுகின்ற கரும்பு, நியூகினியாவிலுள்ள
காட்டு ரகமான (wild varieties) சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவிலுள்ள சக்காரம்
ஸ்பான்டேனியத்துடன் அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பலமுறை பிற்கலப்பு செய்ததன் மூலம்
பரிணமித்தது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும்
கரும்பு விளைவிக்கப்படுகின்றது.
வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு (molasses) எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.
தாவரவியல்
பெயர்: ஸ்டீவியா ரிபௌடியானா
குடும்பம்: அஸ்டிரேசி
ஸ்டீவியா என்பது ஸ்டீவியா ரிபௌடியானா இலைகளிலிருந்து
எடுக்கப்படும், சர்க்கரைக்கு மாற்றான ஒரு இனிப்பாகும். இது கலோரிகளற்றது. சர்க்கரையை
விட 200 மடங்கு அதிகம் இனிப்பானது . ஸ்டீவியாவின் இனிப்புக்கு ஸ்டீவியோசைட் எனும் வேதி
பொருளே காரணமாகும்.
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
ஸ்டீவியா பிரேசில் மற்றும் பராகுவேயைப் பிறப்பிடமாகக்
கொண்டது. இமாச்சல பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது.
பயன்கள்
இது மிகவும் பிரபலமான இயற்கை இனிப்பாகவும், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
தாவரவியல்
பெயர்: பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்
குடும்பம்: அரிகேசி
(தமிழ்நாட்டின் மாநில மரம்)
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்பமண்டலப்
பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில்
அதிமாக வளர்கின்றது. பயன்கள் கருப்பட்டி / கருப்புக்கட்டி தயாரிக்க அதன் மஞ்சரி அச்சிலிருந்து
வெளியேறும் பதநீர் கரைசல் (exudate) சேகரிக்கப்படுகிறது. மஞ்சரியை வெட்டுவதிலிருந்து
(tapped) கிடைக்கப்பெறும் பதநீர் ஆரோக்கியப் பானமாகப் பயன்படுகிறது. பதநீர் பதப்படுத்தப்பட்டு
(processed) பனை வெல்லமாகவோ அல்லது புளிக்க வைத்துக் கள்ளாகவோ பெறப்படுகின்றது. இதன்
கருவூண்திசு (endosperm) (நுங்கு) புத்துணர்ச்சி தரும் கோடைக்கால உணவாக (நுங்கு) பயன்படுகிறது.
முளைவிட்ட விதைகளில் உள்ள நீளமான கருவினைச் சூழ்ந்து காணப்படும் சதைப்பற்றான செதில்
இலை (பனங்கிழங்கு ) உண்ண க்கூடியது.