பயன்கள், தாவரவியல் பெயர் - உணவுத் தாவரங்கள் - மிகச்சிறு தானியங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
மிகச்சிறு தானியங்கள் (Minor Millets)
தாவரவியல்
பெயர்: பானிக்கம் சுமத்ரன்ஸ்
பழமையான மிகச்சிறு தானியங்களில் சாமை
(Millet) ஒன்று. இது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதன் சிற்றினப் பெயர் சுமத்திராவிலிருந்து
சேகரிக்கப்பட்ட வகை மாதிரியின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் இரும்பு சத்து,
நார்சத்து போன்றவை அரிசியை விட அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக்
கருதப்படுகிறது.
சாமை அரிசியைப் போன்றே சமைக்கவும், அரைக்கவும், அடுமனை பண்டத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
தாவரவியல்
பெயர்: சிட்டேரியா இடாலிக்கா
இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும்
தினை வகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச்
சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. தினையில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் B, C, பொட்டாசியம்
மற்றும் கால்சியம் போன்றவை மிகுந்துள்ளன.
தினை இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையருக்குக் கொடுக்கப்படுகிறது.
தாவரவியல் பெயர்: பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
வரகு மேற்கு ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. நார்சத்து, புரதம் மற்றும் கனிமங்கள்
நிறைந்தது.
பயன்கள்
வரகு மாவாக அரைக்கப்பட்டுக் களியாக்கப்படுகின்றது
(Pudding). சிறுநீர் பெருக்கியாகவும், மலச்சிக்கலைக் குணப்படுத்தவும், உடல் பருமனைக்
குறைக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.