Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | தொழில் முனைவுத் தாவரவியல்
   Posted On :  05.08.2022 01:04 am

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

தொழில் முனைவுத் தாவரவியல்

தொழில் முனைவுத் தாவரவியல் என்பது தாவர வளங்களைப் பயன்படுத்திப் புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதனையும், அதற்கான செயல்முறைகளையும் விளக்கும் தாவரவியல் பிரிவு.

தொழில் முனைவுத் தாவரவியல் (Entrepreneurial Botany)

தொழில் முனைவுத் தாவரவியல் என்பது தாவர வளங்களைப் பயன்படுத்திப் புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதனையும், அதற்கான செயல்முறைகளையும் விளக்கும் தாவரவியல் பிரிவு. தொழில்முனைவோர் (entrepreneur) என்போர் மக்கள் வாங்குவதற்கான தயாரிப்பையோ அல்லது சேவையையோ உருவாக்குவதற்கான யோசனையின் அடிப்படையில் அதன் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் துணை நிற்கும் ஓர் நிறுவனத்தைத் துவக்கி நடத்துபவராவார். இளைஞர்களிடையே புதிய துறைகள் உருவாக்குவதற்கான யோசனைகளை வளர்த்துக் கொள்வதற்காக மேல்நிலை மாணவர்களுக்கான இச்சிறப்பான தனித் தலைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தாவரவியல் மாணவர்களுக்குப் பரந்த வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய சூழலில் மாணவர்கள் தங்கள் திறனையும் அறிவையும் பொருத்தமுள்ள முறையில் ஒன்றிணைப்பதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாவரவியல் அறிவை வாழ்வாதாரத்திற்கான வணிகக் கருத்துருவாக உருவாக்குவதற்கான பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது.

மாணவர்கள் இம்மாதிரியான திறமைகளை நடைமுறை பயிற்சி மூலம் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு சில தொழில் சார்ந்த செயல்பாடுகளைவிளக்குவதே இப்பகுதியின் நோக்கமாகும்.


1. காளான் வளர்ப்பு

வளரும் நாடுகளில் மக்களின் தினசரி உணவில் போதுமான புரதமும் ஊட்டச்சத்துக்களும் இல்லாததால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மிகப்பெரிய உடல் நலச் சீர்கேடாகும். இத்தகைய சூழலில் பல்வகைப் புரதங்க ளும் , ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள காளான்கள் ஒவ்வொரு நாளும் நம் உணவின் அடிப்படை மற்றும் இன்றியமையாத பகுதியாக இருத்தல் வேண்டும். காளான்கள் பூஞ்சையின் உண்ணக் கூடிய கனியுறுப்பு. அதன் ஊட்டச்சத்து


மதிப்பு மட்டுமல்ல, அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவையினால் காய்கறிகளில் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது. வெள்ளை காய்கறி (white vegetable) என்றும் காளான்கள் அழைக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் காளான் வளர்ப்பு பெருமளவில் நடைபெறுகிறது. காளான் வளர்ப்பு செயல்பாடுகள் உள்ளூர் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் துணைபுரிகின்றன. உள்ளூர் சந்தைகளில் காளான் விற்பனை செய்வதால் குடும்பத்திற்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

காளான் வளர்ப்பின் படிநிலைகள்

• உரமாகப் பயன்படுத்தப்படும் பழுத்த வைக்கோல், தங்க மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதை 2 - 4 அங்குல நீளத்தில் வெட்டிக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.

• வளர்ப்பிடம் சுத்தமாகவும், காற்றோட்டத்துடனும் இருத்தல் வேண்டும். மேலும் பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் நுழைவதைத் தடுக்கும் வண்ணம் ஜன்னல்கள் கம்பி வலையால் மூடப்பட வேண்டும்.

• வளர்ப்பு அறையில் வித்து (spawn) இடும் முன்னரும், பிற பைகளுக்கு மாற்றுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரும் 0.1%நியூவான் மற்றும் 5% பார்மலின் கலந்து தெளிக்க வேண்டும்.

• காளான் வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் வித்து தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். வளர்ப்புப் பைகளில் 8 கிலோ ஈரமான வைக்கோலை நிரப்ப வேண்டும்.

• வித்திடும் நேரத்தில் நிலவும் வெப்பநிலை 20° C - 30 ° Cயும், ஈரப்பதம் 75 - 85% வரை இருக்கும்படி பராமரித்தல் வேண்டும்.

• வளர் உறைகளை அகற்றும்போது சரியான முறையில் நீர் தெளித்து, உலர் திட்டுக்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தவிர்த்தல் நலம்.

• இரண்டு பைகள் அல்லது தொகுதிகளுக்கு (block) இனடகய  20 செ.மீ இனடவெளி  இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

• காளான் குடைகள் (Caps) 10 - 12 செ.மீ. அளவை எட்டும்போது, திருகிப் பறிக்க வேண்டும்.

இரண்டு வகையான காளான்கள் வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டு (button) மற்றும் சிப்பி (oyster) காளான் ஆகும்.


2. ஒற்றைச்செல் புரத (SCP) உற்பத்தி

உணவாகவோ,விலங்குத்தீ வனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள். SCP உற்பத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய நுண்ணியிரிகள், உயர் உயிரினங்களை (higher living organism) விடப் புரதங்களை விரைவாக உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. பாசிகள், பூஞ்சைகள், ஈஸ்ட்கள், பாக்டீரியங்கள் போன்ற நுண்ணியிரிகள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்பகுதியில் ஸ்பைருலினா பாசியிலிருந்து SCP உற்பத்தி செய்வதைப் பற்றி அறியவிருக்கின்றீர்கள்.


சிறிய அளவிலான ஸ்பைருலினா உயிர்த்திரள் (biomass) உற்பத்தி

இதற்கு மீன்தொட்டி, காற்று உந்தி (air pumps), ஊட்டச்சத்துகள், ஸ்பைருலினா தாய் மூலம் (mother culture) போன்றவை தேவைப்படுகின்றன.

• 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மீன்தொட்டியில் பாதியளவு நீரை நிரப்ப வேண்டும்.

• நீரில் ஃபுளூரின், கால்சியம், கார்பனேட் போன்றவை அல்லது ஏதாவதுகன உலோகங்கள் உள்ளனவா என்பதைச் சோதிக்க வேண்டும்.

• தொட்டியில் நீரை நிரப்பி ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கும் பொழுது, முக்கியமாக ஜரூக் (zarrouk) ஐ முதலில் பாதியையும், பின்னர் மீதியையும் சேர்த்தல் வேண்டும்.

• ஊட்டச்சத்துக்களைச் சேர்த்த பிறகு, ஊடகத்தைக் காற்றேற்றுவதற்கு காற்று உந்தியைப் பொருத்த வேண்டும் (மையவிலக்கு விசை உந்தியைத் தவிர்க்க வும்)

• ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் தாய் மூலத்தை (mother culture) தொட்டியில் சேர்த்தல் வேண்டும்

• ஒரு வாரத்திற்குப் பின் வளர் ஊடகத்தை சரிபார்த்து, மீண்டும் கூடுதலாக நீர் சேர்த்து, உயிரித்திரள் (biomass) அடர் பச்சை நிறமாக மாறும் வரை வைத்திருக்க வேண்டும்.

• மெல்லிய துணியைப் பயன்படுத்திப் பாசியை அறுவடை செய்தல் வேண்டும்

• நீரை மீண்டும் பயன்படுத்தலாம்.

• பாசியைப் பின்னர்ப் பயன்படுத்துவதற்கு ஏற்ப உலர வைக்கவும்.

புரதம், வைட்டமின், இன்றியமையாத அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளதால் ஒற்றைச்செல் புரதம் அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ளதாகிறது. எனவே இது புரதத்திற்கான சிறந்த துணை உணவாகிறது. எனினும், அதிக நியூக்ளிக் அமிலம் உள்ளதாலும் செரிமானம் தாமதிப்பதாலும் வழக்கமான புரத மூலங்களுக்கு முற்றிலும் மாற்றாகக் கருதமுடியாது. மேலும் இது ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம்.


3. திரவக் கடற்களை உரம் (seaweed liquid fertilizer)

திரவக் கடற்களை உரங்களில் நுண்சத்து கனிமங்கள் (trace elements) மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அவற்றை அறுவடை செய்தவுடன் உரத்துக்கான தழைக்கூளமாகவோ அல்லது திரவ உரம் தயாரிக்கவோ எளிதாகப் பயன்படுத்தலாம். திரவக் கடற்களை உரங்கள், தாவரங்கள் பயன்பெறும் 60 ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கின்றன.

• அதிக நாற்றமற்ற (stinky) கடற்களையைச் சேகரிக்க வேண்டும்.

• அதிகப்படியான உப்பை நீக்குவதற்காகக் கடற்களையைச் கழுவ வேண்டும்.

• வாளியில் முக்கால் பகுதி நீர்நிரப்பி, அதில் நிரம்பும் அளவுக்குக் கடற்களையைச் சேர்த்து மூழ்கியிருக்குமாறு ஊற வைக்கவும்.

• இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை கடற்களையைக் கலந்து விடவும்.

• பல வாரங்களிலிருந்து பல மாதங்கள் வரை ஊற வைக்கவும். காலப்போக்கில் உரம் வலுவான நிலையடையும். (இச்செய்முறை அமைப்பை அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கா வண்ணம் வைப்பதை உறுதி செய்யவும்)

• இது அம்மோனியா வாசனையை இழந்ததும் பயன்படுத்துவதற்கு உகந்ததாகிறது.

• தயாரானதும், தாவரங்கள் மற்றும் தோட்டப் படுகைகளில் (garden beds) பயன்படுத்தும் உரமாகிறது. (பயன்படுத்துவதற்கு முன்னர் மூன்று பகுதி நீருக்கு ஒரு பகுதி என்ற அளவில் நீர்க்க வேண்டும்)

திரவக் கடற்களைச் சாறு தாவரங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. தொடர் பயன்பாடு சுற்றுச்சூழல் அழுத்தம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது.இதைப் பழம், பூ, காய்கறிப் பயிர்கள், புதர்ச் செடிகள், மரங்கள் போன்றவற்றிற்கான இலை தெளிப்பானாகவும் பயன்படுத்தலாம். அனைத்துத் தாவரங்களிலும் ஆரோக்கியமான வளர்ச்சியை இது தூண்டுகிறது.


4. இயற்கை வேளாண்மை (Organic farming)

இயற்கை வேளாண்மை என்பது ஒரு மாற்று வேளாண்மை முறையாகும்; இதில் உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி இயற்கையாகத் தாவரங்கள் பயிரிடப்படுவதால் மண்வளமும் சுற்றுச்சூழல் சமநிலையும் பராமரிக்கப்பட்டு மாசு மற்றும் இழப்பு குறைக்கப்படுகிறது. பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். ஒருங்கிணைந்த இயற்கை விவசாய மேலாண்மையின் முக்கியக்கூறுகளில் ஒன்றாக உயிரி உரங்கள் (bio-fertilizers) பயன்படுத்தப்படுகின்றன இவை விலை குறைந்த, புதுபிக்கத் தகுந்த மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன்தரு வேளாண்மையில் (sustainable agriculture) பங்கு பெறுகின்றன.

உயிரி உரங்கள் தயாரிப்பில் தாவரங்களுடன் தொடர்புடைய பல நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது.

i. இயற்கை பூச்சிக்கொல்லி (Organic pesticide)

செடிப்பேன் சிலந்தி கரையன் போன்ற பூச்சிகள் மலர்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துகின்றன. இந்த உயிரினங்கள் திரளாகத் தோட்டங்களைத் தாக்குகின்றன, மேலும் நோய்த்தொற்றை உருவாக்கி பயிரின் வாழ்நாளைக் குறைக்கின்றன. பல இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மனிதனுக்கும் சுற்று 2GKB சூழலுக்கும், பாதுகாப்பற்றவை என நிருபணமாகியுள்ளன. இத்தகைய பழங்கள், காய்கறிகள், போன்றவை உண்பதற்குப் பாதுகாப்பற்றவையாக உள்ளன. எனினும் பூச்சிகளுக்கு எதிராகப் போரிடக்கூடிய பல இயற்கை பூச்சிக்கொல்லிகளை வீட்டிலேயே தயாரிக்க இயலும்.

இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு

பார்க்க வும். படம் 10.24

II. உயிரிப் பூச்சி விரட்டி (Bio Pest Repellent) வேம்பின் உலர்ந்த இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி,பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

உயிரிப் பூச்சிவிரட்டி தயாரிப்பு

• வேப்பமரத்திலிருந்து இலைகளைப் பறித்துச் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

• நறுக்கிய இலைகளைச் சுமார் 50 லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தில் பாதியளவு நீரில் போட்டு மூடி மூன்று நாட்கள் நொதிக்க விடவும்.

• மூன்று நாட்கள் நொதித்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி இலைகளை நீக்கவும். வடி கட்டிய நீரைப் பூச்சிகளை விரட்டத் தாவரங்களில் தெளிக்கவும்.

• பூச்சிவிரட்டி தாவரத்தில் ஒட்டுவதை உறுதி செய்ய 100 மி.லி சமையல் எண்ணெயும் அதே அளவு சோப்புக்கரைசலும் சேர்க்க வேண்டும். (சோப்புக்கரைசல் எண்ணெய்ப் பசையை நீக்கவும், எண்ணெய் பூச்சிவிரட்டி இலைகளில் ஒட்டிக் கொள்ளவும் உதவுகிறது.)

• கலவையிலிருந்து எடுக்கப்பட்ட நொதித்த இலைகளை உரக்குவியலாகவோ, தாவர வேர்ப்பகுதிகளைச் சுற்றியோ இடலாம்.




5. கண்ணாடித் தாவரப் பேணகம் (Terrariam)

கையடக்கச் சிறிய அறை பசுந்தாவரங்களை வணிகரீதியாக விற்க முடியுமா? கண்ணாடித் தாவரப் பேணகம் என்பது உள்ளிருப்பது வெளியில் தெரியக்கூடிய, ஒளி ஊடுருவும், மூடிய கண்ணாடி கொள்கலனில் வளர்க்கும் சிறு செடிகளின் தொகுப்பாகும். இத்தகைய கண்ணாடி பேணகங்கள் எளிதில் தயாரிக்கக்கூடிய குறைந்த பராமரிப்பு கொண்ட குறைந்தளவு நீரில் நீண்டநாள் வாழக்கூடிய தோட்டங்களாகும்.

கண்ணாடித் தாவரப் பேணகத்தை தயாரிப்பது எப்படி?

கொள்கலனைத் தயார் செய்தல் : உங்களுக்கு விருப்பமான கண்ணாடி கொள்கலனைக் கடையிலிருந்து சேகரித்து, சுத்தம் செய்து கொள்ளவும். தாவரத்தை எவ்வாறு கண்ணாடி கொள்கலனுள் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

வடிகால் அடுக்குகளை அமைத்தல் : கூழாங்கற்களைப் பயன்படுத்தி ஒரு வடிகால் போன்ற அடுக்கை உருவாக்குவதால் நீர் வடிந்து, தேக்கமடைவது தவிர்க்கப்படுகிறது கொள்கலனின் அளவைப் பொறுத்துக் கூழாங்கற்களின் அடுக்கின் ஆழத்தைத் கரி தீர்மானிக்கலாம். செயலூட்டப்பட்ட கரியைச் சேர்த்தல்: பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காவும் , கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும்  கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரி சேர்க்கப்படுகிறது.

மண் சேர்த்தல்: தாவர வேர்கள் பற்றி வளர்வதற்குப் போதுமான இடமளிக்கும் வகையில் தேவையான அளவு மண் சேர்க்கவும்.

தாவரங்கள் : கள்ளிமுளியான் சிற்றினங்கள், தண்ணீர்விட்டான் கிழங்கு சிற்றினங்கள், பருப்புக்கீரை சிற்றினங்கள், குளோரோபைட்டம் சிற்றினங்கள் போன்றவற்றுள் விரும்பிய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதன் வேர்கள் நீளமானதாக இருந்தால் ஒழுங்கமைக்கவும் ஒரு குச்சியைப் பயன்படுத்திக் குழி தோண்டித் தாவர வேர்களை அதனுள் வைத்து வேரின் மேல் மண் சேர்த்து அழுத்தி வைக்கவும்.

கொள்கலனில் சிறிய தாவரங்களை விளிம்பில் இருந்து விலக்கி நடுவதால், இலைகள் விளிம்பில் தொடாதிருக்கும். தாவரங்களை நட்ட பிறகு மாஸ் பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவுத் தாவரவியலும் அடுக்குகள் (உலர்ந்த அல்லது உயிருடன் உள்ள), சிறிய சிலைகள் (பழைய பொம்மைகள், கண்ணாடி மணிகள்) அல்லது சிறிய பாறை அடுக்குகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும் இது ஒரு சிறிய பசுமை உலகமாகும்.


சுத்தப்படுத்துதல் மற்றும் நீர்பாய்ச்சுதல் : கொள்கலனின் பக்கங்களில் அழுக்கு இருந்தால் துடைக்க வேண்டும். கண்ணாடித் தாவரப் பேணகத்திற்கு சிறிது நீர் பாய்ச்சி, சிறிய அழகிய பசுமை உலகை உங்கள் மேசை மீதோ அல்லது வரவேற்பறையிலோ வைத்து ரசிக்கலாம்.

ஆயத்தக் கண்ணாடித் தாவரப் பேணகங்கள் : அறை மற்றும் தோட்ட அணிகலனாகவோ அல்லது பரிசுப் பொருட்களாகவோ விற்று நல்ல பொருளீட்டலாம்.




6. மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் பயிரிடுதல்

உலகமயமாக்கல் அனைத்து வியாபாரப் பிரிவுகளிலும் வாய்ப்புகளையும் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நுகர்வோர் பொருட்களுக்கான தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஏறக்குறைய 8,000 மூலிகைத் தாவரங்களையும் 2,500 நறுமணத் தாவரங்களையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இந்திய அராசங்கம் இந்தியாவை 21-ம் நூற்றாண்டில் உலக முன்னோடியாக்கக் கூடிய துறைகளில் ஒன்றாக மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளது.

மருத்துவப் பண்புகளைக் கொண்ட இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் மூலிகைத்தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன. மருந்துகள் மூலம் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதியப் பொருட்கள் பாரம்பரிய மற்றும் உயிரி மருத்துவ முறைகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் இன்னும் வளர்ப்புச்சூழலுக்கு உட்படாத காடுகளிலிருந்து தான் சேகரிக்கப்படுகின்றன. மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களில், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம் (CIMAP) அதிக விளைச்சல் தரும் இரகங்களையும் செயலாக்கத் தொழில் நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது. மூலிகைத்தாவரங்களை இலாபகரமாகப்பயிரிடுதலைப் பாரம்பரிய வேளாண்மை அல்லது தோட்டக்கலை பயிர்களுடன் இணைந்து தொழில்முனைவோரால் நடைமுறைப்படுத்த முடியும். அவைகளை இலாபகரமாக ஊடுபயிராகத் தோட்டங்களில் பயிரிடலாம். மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களைப் பயிரிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.

• துணைத் தொழில்களின் வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

• ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டலாம்

• வீட்டு விலங்குகளாலும், பறவைகளாலும் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதில்லை .

• இதன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கும் சூழலுக்கும் உகந்ததாக உள்ளன.

|. மூலிகைப் பயிர் பயிரிடுதல் – குளோரியோசா சூபர்பா (செங்காந்தள் )

பொருளாதார முக்கியத்துதவம் வாய்ந்த தாவரப் பகுதி - விதை, மட்டநிலத்தண்டு.

முக்கிய வேதிக்கூறுகள் - கால்சிசின் (0.5 – 0.7%) மற்றும் கால்சிகோசைடு.

பயன்கள் - கீல்வாத குணப்படுத்தி, அழற்சி எதிர்ப்பி, புற்றுநோய் எதிர்ப்பி.


மண் மற்றும் காலநிலை : சிவப்பு தோட்ட மண் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாட்டில், முக்கியமாகத் திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.

தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB)

இந்திய அரசு 24.11.2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது. தற்போது இந்த வாரியம் இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் (AYUSH) அமைப்பின் கீழ் இயங்குகிறது. பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ மூலதனத்துடன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான முறையை உருவாக்குவதே NMPB-ன் முதன்மை நோக்கமாகும். வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயல் மற்றும் அயல் சூழல் பாதுகாப்பிலும் உள்ளூர் மூலிகை மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த நறுமண இலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

நடவு: ஜுன்-ஜுலை மாதத்தில் நடவு செய்யப்படுகிறது. இரண்டு முதல் மூன்று முறை வயலை உழுது, கடைசி உழவின் போது 10 டன் பண்ணை உரம் சேர்க்க வேண்டும். 30 செ.மீ. ஆழக் குழிதோண்டிக் கிழங்குகளை 30 - 45 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும். ஒரு ஆதாரத்தின் மீது கொடிகள் சுற்றிவிடப்பட வேண்டும்.

நீர்பாசனம்: நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் அடுத்தடுத்து ஐந்து நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:காய்கள் (pods) 160 முதல் 180 நாட்களில் அறுவடை செய்யப்படுகின்றன.

II. நறுமணத் தாவரம் பயிரிடல் – சிம்போபோகான் சிட்ரேட்டஸ் (எலுமிச்சம் புல்)

எலுமிச்சம் புல் (Lemon grass) என்பது திடமான எலுமிச்சை மணமுடைய ஒரு வெப்பமண்டல மூலிகையாகும். எலுமிச்சை சுவை ஆசியச் சமையலிலும், தேநீர், சுவையூட்டிகள் மற்றும் சூப்களிலும் அதிக மதிப்புமிக்கதாக உள்ளது.


பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பகுதி : தண்டின் அடிப்பகுதியும், இலைகளும்.

முக்கிய வேதி கூறுகள் : சிட்ரோனெல்லால், ஜெரனியால், சிட்ரோனெல்லால் ஆகியவை முதன்மை வேதி பொருட்களாகும்.

பயன்கள்: நறுமண எண்ணெய் சுவையூட்டும் பண்புளைக் கொண்டுள்ளது. மேலும் மணமூட்டிகள், ஒப்பனைப் பொருட்கள், இனிப்புகள், பானங்கள், கொசு விரட்டிகள், கழிப்பறை கழுவிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

மண் மற்றும் காலநிலை: எலுமிச்சம் புல், நல்ல சூரிய ஒளியும், மிகுந்த நீர்வளமும், நன்கு வடியும் தன்மையும் (well drained) கொண்ட மண்ணில் நன்கு வளரும்.

நடவு: இத்தாவரம் ஆண்டு முழுவதும் நன்கு வளரக்கூடியது. மண்ணின் வளமையும் நீர் கொள்திறனும் அதிகரிக்க நடவுத் துளைகளை உரம் கொண்டு நிரப்ப வேண்டும். தாவரங்களுக்கிடையே 60 செ.மீ. இடைவெளி விட்டு நட வேண்டும்.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (CSIR Aroma Mission of India)

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இத்திட்டம் நாட்டில் அத்தியாவசிய எண்ணெய் சார்ந்த நறுமணத் தொழில் நிறவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது. இதன் மூலம் தொழிற்சாலைகள், விவசாயிகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோருக்கும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு உகந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நறுமணத்தாவரங்களின் பயிரிடுதல் மற்றும் வணிகப் பயன்பாட்டின் மூலம் தொழில் முனைவை வளர்க்க உதவுகிறது.

நீர்பாசனம்: இத்தாவரங்களுக்குத் தேவையான நீரின் அளவு அது வளரும் மண்ணின் வகையைச் சார்ந்து மாறுபடும். வண்டல் கலந்த மண்ணைவிட, மணற்பாங்கான, தளர்வான மண்ணிற்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: தண்டு 30 செ.மீ. உயரமும் தண்டின் அடிப்பகுதி 1.5 செ.மீ. சுற்றளவையும் அடையும் போது தரைமட்டத்திலிருந்து அறுவடை செய்ய வேண்டும்.

12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany : Entrepreneurial Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : தொழில் முனைவுத் தாவரவியல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்