Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : பாடச்சுருக்கம்
   Posted On :  07.08.2022 10:19 pm

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : பாடச்சுருக்கம்

ஆரம்பகாலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய நாகரீகங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பலவகையான தாவரங்களை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தினர்.

பாடச்சுருக்கம்

ஆரம்பகாலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய நாகரீகங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பலவகையான தாவரங்களை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தினர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் அதன் பயன்பாட்டைப் பொறுத்து உணவுத்தாவரங்கள், தீவனத் தாவரங்கள், நார் தாவரங்கள், கட்டை தரும் தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள், காகிதத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தாவரங்கள், சாயத் தாவரங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படையில் ஒரு சில தானியங்களையும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், சர்க்கரைகள், எண்ணெய் விதைகள், பானங்கள், நறுமணப் பொருட்கள் , சுவையூட்டிகளை சார்ந்துள்ளது.

எண்ணெய்கள் இரண்டு வகைப்படும். அவை அத்தியாவசியமான எண்ணெய்கள் மற்றும் தாவர எண்ணெய்கள். கொழுப்பு அமிலங்கள் நிறைவுற்ற அல்லது நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களான உள்ளன. வேர்க்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய் மற்றும் கடுகு எண்ணெய் கொடுக்கும் தாவரங்களாகும். சமையல், சோப் தயாரிக்க, மற்ற பயன்பாடுகளுக்கு எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆல்கலாய்ட் கொண்ட பானங்கள் மைய நரம்பு மண்டலத்தை தூண்டும். காஃபி, தேயிலை, கோகோ போன்றவை ஆல்கஹாலற்ற பானங்களாகும். பல்லாண்டுகளாக உலகமெங்கும் நறுமணப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. "நறுமணப்பொருட்களின் அரசி" எனப்படும் ஏலக்காய் மிட்டாய் தொழிற்சாலைகள் மற்றும் பானங்களை மணமூட்டப் பயன்படுகிறது. மிளகு நறுமணப்பொருட்களின் அரசன் ஆகும்.

தாவரவியலின்படி நார் என்பது ஒரு நீண்ட, குறுகிய மற்றும் தடித்த சுவருடைய செல்லாகும். நார்கள் உபயோகத்தின் அடிப்படையில் நெசவு நார், தூரிகை நார், பின்னல் நார், திணிப்பு நார் என வகைப்படுத்தப்படும். பருத்தி, சணல், தென்னை ஆகியவை நார் கொடுக்கும் தாவரங்களாகும். தேக்கு, தோதகத்தி , கருங்காலி கட்டைகள் மரச்சாமன்கள் சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன. இரப்பர் ஹீவியா பிரேசிலியன்சிஸ் மரப்பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காகித கூழ் உற்பத்தி என்பது சீனக் கண்டுபிடிப்பு. சாயங்கள் பண்டைய காலங்களிலிருந்து உபயோகத்திலுள்ளன. இண்டிகோ இண்டிகோஃபெரா இலைகளிலிருந்து பெறப்பட்ட சாயமாகும் ஆரஞ்சு நிற மருதாணி லாசோனியா இலைகளிலிருந்து பெறப்படுகிறது. ஒப்பனைப் பொருட்கள் இன்று அதிக வணிக மதிப்பைப் பெற்றுள்ளதால் இவை வேதிப்பொருள் சார்ந்த ஆலைப் பொருட்களாகிவிட்டன. பல்வேறு தாவரங்களிலிருந்து பெறப்படும் மணமுள்ள, எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்களிலிருந்து நறுமணத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. மூலிகைத் தாவரங்கள் சிகிச்சைக்கான காரணிகளாக மட்டுமின்றி பாரம்பரிய மற்றும் நவீன மருந்து தயாரிப்பில் முக்கிய மூலப்பொருட்களாகவும் பங்காற்றுகின்றன. தாவரங்களிலிருந்து பெறப்படும் மருத்துவ மூலக்கூறுகளுள்ள மருந்துகள் உயிரி மருந்து என்று அழைக்கப்படுகின்றது. எனினும் சில தாவரங்களிலிருந்து பெறப்படும் வேதிப் பொருட்கள் ஒருவருடைய புலனுணர்வுக் காட்சிகளில் மருட்சியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் புலனுணர்வுக் மாற்ற மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. இதனால் உலகெங்கிலும் வாழும் மக்களின் வாழ்வில் தாவரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தொழில் முனைவுத் தாவரவியல் என்பது தாவர வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதனையும் அதற்கான செயல்முறைகளையும் விளக்கும் தாவரவியல் பிரிவு, காளான்கள், காய்கறிகளில் மிகவும் விலையுர்ந்த உண்ணக்கூடிய பூஞ்சையின் கனியுறுப்பாகும்.

ஒற்றைச்செல்புரதம் என்பது மனித உணவாகவோ, நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள் ஆகும். பாசிகள், பூஞ்சைகள், ஈஸ்ட்கள், பாக்டீரியங்கள் போன்ற நுண்ணியிரிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

கண்ணாடித் தாவரப் பேணகம் என்பது வெளியில் தெரியக்கூடிய, ஒளிப்புகும், மூடிய கண்ணாடி கலன்களில் வளர்க்கும் சிறு செடிகளின் தொகுப்பாகும். முழு வளர்ந்த மரத்தின் வடிவையும், அளவையும் ஒத்திருக்கும் கலன்களில் குறுமரங்களாக வளர்க்கப்படும் ஜப்பானிய கலை போன்சாய் ஆகும்.

மூலிகைத் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப் பொருட்கள் பாரம்பரிய மற்றும் உயிரி மருத்துவத்துறைகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய் தீர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்றும் பெரும்பான்மையான மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் வளர்ப்புச் சூழலுக்கு உட்படாத காடுகளிலிருந்து தான் சேகரிக்கப்படுகின்றன.


கலைச்சொற்கள்

உயவுப்பொருள்: உராய்வைக் குறைக்கும் எண்ணெய் பொருள்

மணம் : வாசனை (நறுமணம் அல்லது துர்வாசனை)


சிறுநீர் பெருக்கி : சிறுநீர் வெளியேறுவதை அதிகரிப்பது


சிரோசிஸ்: மதுப்பழக்கம் அல்லது மஞ்சள் காமாலை நோயினால் ஏற்படக்கூடிய நாள்பட்ட கல்லீரல் நோய்


ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி : ஆக்சிஜனேற்றத்தை எதிர்க்கும் பொருள் அபானவாயு நீக்கி வயிறு அல்லது குடல் பகுதியிலிருந்து வாயுவை வெளியேற்றும் மருந்து


ஊட்டச்சத்து குறைபாடு: ஒருவரின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து உட்கொளலில் உள்ள சமநிலையற்றதன்மை


வித்து: காளான் வளர்ப்பிற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மைசீலியம்


நறுமணத் தாவரங்கள்: நறுமண எண்ணெய்களை உற்பத்திச் செய்யும் தாவரம்


நறுமணத்தைலக் கலை: நறுமணத்தைலங்கள் செய்யும் செயல்முறை அல்லது கலை.


ஒப்பனைப் பொருட்கள்: வெளி அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது தயாரிப்பு


இனிப்பகம் : இனிப்புகள் அல்லது மிட்டாய்கள் விற்கப்படும் அல்லது செய்யப்படும் இடம்


அழற்சி எதிர்ப்பி: வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள் அல்லது சிகிச்சை


அல்சீமர் நோய்: நினைவு, சிந்தனை மற்றும் நடத்தையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மனச்சோர்வு


தொல்குடி உயிரியல்: மக்கள் மற்றும் தாவரங்களுக்கிடையிலான உறவு பற்றிய உயிரியல் பிரிவு


குணபாடம். அரசாங்கம், மருத்துவம் அல்லது மருந்து தொழில்சார் சமூகத்தினரால் மருந்து மூலக்கூறுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்களை கொண்ட புத்தகம்


நிறுத்தி: ஆவியாதல் வீதத்தை குறைப்பதற்கும் அதிக காற்றால் கரையும் தன்மையுடைய பொருட்களை சேர்க்கும் போது நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் பொருள்


வியர்வை எதிர்ப்பி (நீக்கி): வியர்வையை தடுப்பதை முதன்மையாக கொண்டு செயல்படும் பொருட்கள்


சுவையூட்டல்: வாசனையை மேம்படுத்தும் மசாலா மற்றும் சுவையீட்டிகளை கொண்டு உணவை பதப்படுத்துதல்

12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany : Economically Useful Plants and Entrepreneurial Botany: Summary in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : பாடச்சுருக்கம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்