பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - மரக்கட்டை | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany

   Posted On :  05.08.2022 12:04 am

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

மரக்கட்டை

தாவரவியல் : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

மரக்கட்டை

அடிப்படைத் தேவையான இருப்பிடம் கட்டை தரும் மரங்களால் கிடைக்கிறது. சில முக்கிய கட்டைத் தாவரங்களை இப்பாடப்பகுதியில் பயிலலாம்.


தேக்கு

தாவரவியல் பெயர்: டெக்டோனா கிராண்டிஸ்

குடும்பம்: லேமியேசி

தோற்றம் மற்றும் விளையுமிடம்

இது தென் கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டது. அஸ்ஸாமில் காட்டுப்பயிராக அறியப்பட்டுள்ளது. வங்காளம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது.

பயன்கள்

இது உலகத்தின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்று. புதிதாக அறுக்கப்பட்ட வன்கட்டை தங்க நிற மஞ்சளிலிருந்து தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும் போது அடர் நிறமாகவும் மாறும். கரையான் மற்றும் பூஞ்சைகளின் எதிர்ப்பாற்றல் கொண்டதால் இது நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பது தெரிந்ததே.

இந்தக் கட்டையானது உடைதல் மற்றும் கீறலுறாததால் தச்சர்களுக்குத் தோழமையானது. இந்தியாவில் முக்கிய ரயில் பெட்டி மற்றும் பாரவண்டி தயாரிக்கப் பயன்படும் கட்டையாகும். கப்பல் கட்டுவதும், பாலம் கட்டுவதும் தேக்குக்கட்டையைச் சார்ந்துள்ளது. படகு , பிளைவுட், கதவு நிலைகள் மற்றும் கதவுகள் செய்யப் பயன்படுகிறது.


தோதகத்தி / ஈட்டி / நூக்க மரம்

தாவரவியல் பெயர்: டால்பெர்ஜியா லாட்டி போலியா

குடும்பம்: பேபேசி

தோற்றம் மற்றும் விளையுமிடம்

தோதகத்தி / ஈட்டி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இது உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிஸா, மத்திய, மேற்கு மற்றும் தென் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது.

பயன்கள்

இந்தியத் தோதகத்தி மஞ்சள் நிறச் சாற்றுக் கட்டையும் மங்கிய பழுப்பிலிருந்து ஏறத்தாழ ஊதா நிற வன்கட்டையும் கொண்டது.கட்டையானது நறுமணமுள்ள, கனமான, குறுகிய பிணைந்த மரச்சிராயமுடன், நடுத்தரக் கரட்டுத்தன்மைப் போன்ற பண்புகளுடையது. நீண்ட உழைப்புடையது , கனமானது எனவே நீரடி பயன்பாட்டுக்கு உகந்தது. மரச்சாமான்கள், ராணுவ வேகன்கள், கோயில் தேர்கள், அலமாரிகள், ரயில் தூங்கு கட்டைகள், இசைக்கருவிகள், சுத்தியல் கைப்பிடிகள், காலணி அடிபுறங்கள், புகையிலைக்குழாய்கள் செய்யவும் பயன்படுகிறது.


கருங்காலி

தாவரவியல் பெயர்: டயாஸ்பைரஸ் எபெனம்

குடும்பம். எபெனேசி

தோற்றம் மற்றும் விளையுமிடம்

இவை பொதுவாகத் தென் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவின் வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும். கருங்காலி கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு காடுகளில் பரவியுள்ளது.

பயன்கள்

வன்கட்டையானது சீராக்கப்படும் போது பளபளப்பான கருப்பாகவும் உலோகப் பளபளப்பிலும் இருக்கும். அது பூச்சிகள், பூஞ்சைகள் தாக்குதலைத் தாங்கும் திறனுடையது. இதன் கட்டை பதப்படுத்தக் கடினமானது. எனவே பதப்படுத்தும் முன் சிறிய துண்டுகளாக வெட்டப்படும். முக்கியமாகப் பியானோ விசைகள், கருவிகளின் கைப்பிடிகள், இசைக்கருவிகள், கைத்தடிகள், குடைக் கைப்பிடிகள், சாட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.

Tags : Uses, Origin and Area of cultivation, Botanical name - Food plants பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள்.
12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany : Timber Uses, Origin and Area of cultivation, Botanical name - Food plants in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : மரக்கட்டை - பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்