பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - பழங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
பழங்கள்
உண்ண க்கூடிய பழங்கள் சதைப்பற்றுடன், இனிய வாசனை மற்றும் சுவையுடையன. பழங்கள் பொட்டாசியம், நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், விட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலமாக உள்ளன. வளரும் தட்பவெப்ப இடத்தைப் பொறுத்துப் பழங்கள் குளிர்மண்டல பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய், ஊட்டி ஆப்பிள்), வெப்பமண்டலப் பழங்கள் (மா, பலா, வாழை) என வகைப்படுத்தப்படுகின்றன. இந்தப் பாடப்பகுதியில் சில வெப்பமண்டலப் பழங்களைப் பற்றிக் காண்போம்.
தாவரவியல்
பெயர்: மாஞ்சி ஃபெரா இண்டிகா
குடும்பம்: அனகார்டியேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும்
கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்
பிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும்
தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும்.
அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள்.
பயன்கள்
மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம். இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது பின் உணவுப் பண்டமாகவோ, பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டோ, உலர்த்திப் பாதுகாக்கப்பட்டோ, இந்திய உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. புளித்த, பழுக்காத மாங்காய் சட்னி , ஊறுகாய், கூட்டு தயாரிக்கவும் அல்லது உப்பு, மிளகாய் சேர்த்து நேரடியாக உண்ணவும் பயன்படுகிறது. மாங்காயின் சதைப்பற்றுப் பகுதியிலிருந்து களிமம் (ஜெல்லி) தயாரிக்கப்படுகிறது. காற்றேற்றப்பட்ட மற்றும் காற்றேற்றப்படாத மாம்பழச்சாறு ஒரு பிரபலமான பழச்சாறு பானமாகும்.
தாவரவியல்
பெயர்: மியூசா x பாரடிசியாகா
குடும்பம்: மியூசேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
வாழை தென்கிழக்கு ஆசியாவில் வளர்ப்புச்சூழலுக்கு
உட்படுத்தப்பட்டது. வாழை உற்பத்தியில் தமிழ்நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது. தேனி,
திருச்சி, ஈரோடு, தூத்துக் குடி , கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல்
ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் வாழை பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளாகும். செவ்வாழை,
நேந்திரன், கற்பூரவல்லி, பூவன், பேயன் ஆகியவை அதிகமாகப் பயிரிடப்படும் வாழை இரகங்களாகும்.
பயன்கள்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது நேரடியாக அல்லது சமைத்து (வறுத்து, உலர வைத்து, வேகவைத்து) உண்ணப்படுகிறது. பழம் பதப்படுத்தப்பட்டு மாவாக்கப்படுகிறது. மேலும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு, பீர், வினிகர், ஒயின் (wine) தயாரிக்கப்பயன்படுகிறது.
தாவரவியல்
பெயர்: அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்
குடும்பம்: மோரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப்
பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர், கன்னியாக்குமரி,
திண்டுக்கல், படம் புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில்
அதிகமாக விளைவிக்கப்படுகின்றது. பண்ருட்டி, கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச்
சந்தை மையங்கள்.
பயன்கள்
பலாச்சுளை நேரடியாகவோ, சமைத்தோ உண்ணப்படுகின்றது. பழுக்காத சுளைத் துண்டுகள் பொரித்து மொறுமொறுப்பான வறுசீவலாகத் தயாரிக்கப்படுகின்றது. விதைகள் வறுத்தோ, அவித்தோ உண்ணப்படுகின்றன. பழுக்காத பலாச்சுளை காய்கறியாகப் பயன்படுகிறது.