பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - பருப்பு வகைகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
பருப்பு வகைகள் (Pulses)
"பல்சஸ்" என்ற சொல் "அடர்ந்த சூப்" எனப் பொருள்படும் லத்தீன் வார்த்தைகளான பல்ஸ் (puls) அல்லது பல்டிஸ் (pultis) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. பருப்பு என்பது ஃபேபேஸி குடும்பங்களிலிருந்து பெறப்படும் விதைகள். இவை உலகிலுள்ள மக்களுக்குத் தேவையான தாவரசார் (plant based) புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை வழங்குகின்றன.
தாவரவியல்
பெயர் : விக்னா முங்கோ
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. தொன்மை தொல்தாவரவியல் சான்றுகள் (Archeobotanical) சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்கின்றன. இது வறண்ட இடங்களில் மானாவாரி (Rainfed) பயிராகப் பயிரிடப்படுகிறது. உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியா 80% பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
பயன்கள்
உளுந்து விதைகள் முழுதாகவோ, உடைத்தோ, வறுத்தோ அல்லது மாவாக அரைத்தோ உண்ண ப்படுகிறது. உளுந்து மாவு பிரபலமான தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவைத் தயாரிப்பதற்கான ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. உடைத்த உளுத்தம் பருப்பு இந்தியக் குழம்பு வகைகளில் தாளிக்கப் பயன்படுகின்றது.
தாவரவியல் பெயர்: கஜானஸ் கஜன்
தோற்றம் மற்றும் விளையுமிடம்
தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை
துவரை ஆகும். இது மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத்
போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
துவரம் பருப்பு தென்னிந்தியாவின் சிறப்பு வகை குழம்பான சாம்பாரின் மிக முக்கிய அங்கமாகும். வறுத்து உப்பிட்ட அல்லது உப்பிடாத பருப்பு ஒரு பிரபலமான நொறுக்குத்தீனியாகும். இளம் காய்கள் (Young pods) சமைத்து உண்ணப்படுகின்றன.
தாவரவியல் பெயர்: விக்னா ரேடியேட்டா
தோற்றம் மற்றும்
விளையுமிடம்
பாசிப்பயறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான
தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிடைக்கப்பெற்றன. இது மத்தியபிரதேசம்,
கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
இதை வறுத்தோ , சமைத்தோ, முளைக்க வைத்தோ பயன்படுத்தலாம்.பாசிப்பருப்பு தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவான பொங்கலில் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகின்றது. வறுத்துத் தோல் நீக்கப்பட்ட, உடைத்த அல்லது முழுப் பயிறு பிரபலமான சிற்றுண்டியாகப்பயன்படுத்தப்படுகின்றன. இதன் மாவு பாரம்பரியமாகத் தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது.
தாவரவியல் பெயர்: சிசர் எரேட்டினம்
தோற்றம் மற்றும் விளையுமிடம்
கொண்டைக்கடலை
மேற்கு ஆசியாவில் தோன்றியது. மேலும் இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டது.
மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
கொண்டைக்கடலையிலுள்ள புரதம், அமினோ அமிலம்,
அதன் செரிமானத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மதிப்புடையதாகக் கருதப்படுகின்றது.
குழந்தைகளுக்கான உணவின் முக்கிய உபப்பொருளாக முளைகட்டிய கடலை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
கடலை மாவு பலவகையான இந்திய இனிப்பு வகைகளின் மூலப்பொருளாக உள்ளது. வறுத்து உப்பிட்ட
முழு அல்லது உடைத்த கடலை, நடுத்தர மக்களின் பிரபலமான திண்பண்டமாக உள்ளது.