அலகு X
பொருளாதாரத் தாவரவியல்
பாடம் 10
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத்
தாவரவியலும்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தினை கற்போர்
• பல்வேறு உணவுத் தாவரங்களின் தோற்றம், விளையுமிடம் மற்றும் பயன்பாடு
பற்றிய அறிவைப் பெறவும்
• வெவ்வேறு நறுமணப்பொருட்களையும், சுவையூட்டிகளையும் மற்றும் அவற்றின்
பயன்களையும் விளக்கவும்
• நார்கள், மரக்கட்டைகள், காகிதம் மற்றும் சாயம் கொடுக்கும் தாவரங்களின்
பலன்களை வெளிப்படுத்தவும்
• மூலிகைத் தாவரங்களின் செயலாக்க மூல மருந்து, பயன்பாடு பற்றிய
அறிவைப் பெறவும்
• காளான் சாகுபடி, SCP உற்பத்தி மற்றும் திரவ கடற்களை உர உற்பத்தி
செய்யும் திறனைப் பெறவும்
• இயற்கை வேளாண்மை, உயிரி உரங்கள், உயிரி பூச்சிவிரட்டி பற்றிய
அறிவைப் பெறவும்
• கண்ணாடித்தாவர பேணகம் மற்றும் போன்சாய் செய்யக் கற்றுக்கொள்ளவும்,
மேலும் மூலிகைத் தாவரங்களைப் பற்றி அறியவும் இயலும்.
பாட உள்ளடக்கம்
10.1 உணவுத் தாவரங்கள்
10.2 நறுமணப்பொருட்கள், சுவையூட்டிகள்
10.3 நார்கள்
10.4 மரக்கட்டை
10.5 மரப்பால்
10.6 மரக்கூழ்
10.7 சாயங்கள்
10.8 ஒப்பனைப் பொருட்கள்
10.9 பாரம்பரிய மருத்துவ முறைகள்
10.10 மூலிகைத் தாவரங்கள்
10.11 தொழில் முனைவுத் தாவரவியல்
நிலத்திலும், நீரிலும் பரந்துபட்ட தாவரத் தொகுதிகளை
நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து அனைத்து வகையான உயிரினங்களும் வாழ்கின்றன. வரலாற்றுக்கு
முந்தைய மனிதர்களின் வாழ்நாள் பழங்கள், கீரைகள், கிழங்குகள் முதலியவற்றைச் சேகரிப்பதிலும்,
விலங்குகளை வேட்டையாடுவதிலும் கழிந்தது. தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்புச்
சூழலுக்கு உட்படுத்தியதன் மூலம் உபரி உணவு உற்பத்திக்கு வழி வகுத்தது. இதுவே நாகரிக
வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஆரம்பகாலத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் தோன்றிய
நாகரிகங்கள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பலவகையான தாவரங்களை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில்
வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தின. இவ்வகை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள்
அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் உணவுத் தாவரங்கள், தீவனத் தாவரங்கள், நார் தாவரங்கள்,
கட்டை தரும் தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள், காகிதத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும்
தாவரங்கள், சாயத் தாவரங்கள், ஒப்பனைப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் என
வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட
தாவரங்கள் இப்பாடப் பகுதியில் விவாதிக்கப்படுகின்றன.