Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாடச் சுருக்கம் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

தாவரவியல் - பாடச் சுருக்கம் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  21.03.2022 11:54 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

பாடச் சுருக்கம் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

வகைப்பாட்டியல் என்பது அடிப்படை கொள்கைகள், விதிகள், செய்முறைகள் அடங்கிய ஒரு வகைப்படுத்தும் அறிவியல் ஆகும்.



பாடச் சுருக்கம்

வகைப்பாட்டியல் என்பது அடிப்படை கொள்கைகள், விதிகள், செய்முறைகள் அடங்கிய ஒரு வகைப்படுத்தும் அறிவியல் ஆகும். குழுமப்பரிணாம் வகைப்பாட்டியல் என்பது பல்வேறு வகையான உயிரினங்களைப் பற்றியும், அவற்றிற்கு இடையேயான உறவுமுறைகளைப் பற்றியும் படித்தறியும் அறிவியல் பிரிவு ஆகும். கரோலஸ் லின்னேயஸ் அவர்களால் வகைப்பாட்டியல் படிநிலைகள் அறிமுகம் செய்யப்பட்டது. வகைப்பாட்டின் பல்வேறு நிலைகளான பெரும்பிரிவு முதல் சிற்றினம் வரை இறங்கு வரிசையின் படிநிலைகளாக அமைந்துள்ளன. சிற்றினக்கோட்பாடு பொதுவாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இனப்பரிணாமவியல் செயல்முறைகளுக்கு வலியுறுத்தும் கோட்பாடுகள் சிற்றினங்களைத் தனி அலகுகளாகப் பராமரிப்பதன் விளைவாக வேறுபட்ட புதிய சிற்றினங்களைப் பரிணாமத்தின் வாயிலாகத் தோற்றுவிக்கின்றன. வகைப்பாட்டியலைப் பற்றி அறிய உதவும் முக்கியத் துணைக்கருவிகள் வகைப்பாட்டு துணைக்கருவிகள் எனப்படும். வகைப்பாட்டு திறவுகள், தாவரப் பட்டியல்கள், தாவரத் தொகுப்புக்கள், தனிவரைவு நூல்கள், உலர்த்தாவரத் தொகுப்புகள், தாவரவியல் தோட்டங்கள் யாவும் வகைப்பாட்டு கருவிகளாகப் பயன்படுகின்றன. உண்மையில் அனைத்துத் தோட்டங்களும் தாவரவியல் தோட்டங்களாகாது. தாவரங்கள் பல நிலைகளில் பல வகைகளில் அமைந்த இடத்தைக் குறிப்பது தாவரயியல் தோட்டம் ஆகும். தோட்டங்களில் அலங்காரத் தாவரங்கள் அழகு, வாசனை, மதம் மற்றும் கௌரவத்திற்காக வளர்க்கப்படுகின்றன. ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையம் அல்லது இடமாகும். தாவரங்களைச் சேகரித்து அழுத்தி, உலர்த்திய பின்பு தாளில் ஒட்டிப் பாதுகாக்கப்படும் இடமாகும். முக்கிய தேசிய மற்றும் பன்னாட்டு ஹெர்பேரியங்கள் பல உள்ளன. MH, PCM, CAL ஆகியன சில தேசிய உலர்த்தாவரச் சேமிப்பு நிலையங்களாகும். கியூ உலர்த்தாவரச் சேமிப்பு நிலையம் உலகிலேயே பெரியதாகும்.

தாவரங்களின் பெரும் பல்வகைமையைப் பற்றிய தகவல்களை அட்டவணைப்படுத்தவும், சார்ந்த தகவல்களை மீளப் பெறுவதற்குமானது என வகைப்பாட்டியல் வரையறுக்கப்படுகிறது. தாவரங்களில் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமை மட்டுமின்றி அவற்றினிடையே காணப்படும் பரிணாமத் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களாக ஒழுங்கமைப்பதற்கு வகைப்பாடு வழிவகுக்கின்றது. தாவரத் தொகுப்புகள் மூன்று வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை (1) செயற்கை வகைப்பாட்டுமுறை (2) இயற்கை வகைப்பாட்டுமுறை (3) மரபுவழி வகைப்பாட்டுமுறை ஆகியவை ஆகும். கரோலஸ் லின்னேயஸ் 1753-ம் ஆண்டில் 'ஸ்பீசிஸ் பிளாண்டாரம்' எனும் நூலில் செயற்கை முறை கோட்பாட்டினை விளக்கினார். தாவரங்களில் காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒரு அணுகுமுறை உருவாகி 1789-ஆம் ஆண்டில் அன்டோனின் லாரெண்ட்டிஜெஸியுவால் முதன் முதலாக வழங்கப்பட்டது.

பரவலாகப் பின்பற்றப்பட்ட சிறந்த ஒரு இயற்கை முறை வகைப்பாடு ஜார்ஜ் பெந்தாம் மற்றும் ஜோசப் டால்டன் ஹூக்கர் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு தாவரவியல் வல்லுநர்களால் வழங்கப்பட்டது. இது ஒரு இயற்கை முறை வகைப்பாடாக இருந்தாலும் இவ்வகைப்பாட்டை ஒரு பரிணாம வகைப்பாடாகக் கருத இயலாது. ஆரம்பகால முழுத் தாவர உலகின் பரிணாம் வகைப்பாடு இரண்டு ஜெர்மானியத் தாவரவியலாளர்களாகிய அடால்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் ஏ பிரான்டில் ஆகியோரால் டி நேச்சர்லிக்கன் ஃபிளான்ஸன் ஃபேமிலியன்’ எனும் நூலில் 23 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. ஆர்தர்கிரான்கிவிஸ்ட் உள்ளமைப்பியல், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தாவர வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான பூக்கும் தாவரங்களின் பரிணாம் வகைப்பாட்டு முறையை தாவரங்களின் பரிணாமம் மற்றும் வகைப்பாடு என்ற தலைப்பிலமைந்த புத்தகத்தில் அவர் தனது வகைப்பாட்டை அளித்தார். பூக்கும் தாவரங்களின் மிக அண்மைக்கால வகைப்பாடு இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் இனப்பரிணாம வழி தரவுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. இது உலகெங்கிலும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வகைப்பாடு. மேலும் அனைத்து முன்னணி வகைப்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பயிற்சி வகைப்பாட்டியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிளையியல் வகைப்பாடு என்பது பகிரப்பட்ட தனித்துவமான மேம்பட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு மூதாதையர் கிளை வழி குழுமமாக வகைப்படுத்தும் முறையாகும். கால்வழி கிளைத்தல் பகுப்பாய்வின் விளைவாகப் பரிணாம வரைபடம் உருவாகிறது. இது ஒரு மர வடிவ விளக்கப்படம். இதற்காக ஒத்த சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட பண்புகள் நிகராய்ந்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. வேதிமுறை வகைப்பாடு என்பது உயிர்வேதியியல் கூறுகளின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தும் ஒரு விஞ்ஞான அணுகுமுறையாகும். குன்றல் பகுப்பின் போது காணப்படும் குரோமோசோம்களின் பண்புகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு சிக்கல்களைக் களைவது கேரியோடாக்ஸானமி எனப்படும். ஒத்த பண்புகளைக் கொண்ட தாவரங்களில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க, அவற்றில் காணப்படும் புரதங்களின் அடிப்படையில் வகைப்படுத்துதல் குருதிநீர்சார் வகைப்பாடு (ஊநீர்) எனப்படும். மூலக்கூறு வகைப்பாடு என்பது மரபு தோற்ற வளர்ச்சி முறையின் ஒரு பிரிவு ஆகும். இது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளை, முக்கியமாக DNA வரிசையில் உள்ள தகவல்களைப் பெறவும், பல்வேறு வகைப்பாட்டு குழுக்களுக்கிடையே உள்ள மரபுவழி உறவை உருவாக்குவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் வழிவகை செய்கின்றது. அலோசைம் (allozymes) மைட்டோகான்டிரிய DNA, நுண்துணைக் கோள்கள், RAPD-க்கள் (தடைக்கட்டு கீற்றாறு நீளப் பலவடிவுடைமை) AFLP-க்கள், ஒற்றை நியுக்ளியோடைடு பலவடிவுடைமை (SNP), மைக்ரோசில்கள் அல்லது வரிசைகள் போன்ற பல்வேறு மூலக்கூறு குறிப்பான்கள் வகைப்பாட்டு முறையில் பயன்படுத்தப்படுகின்றன. DNA அளவில் வெவ்வேறு தாவரக் குழுக்களின் உறவை உருவாக்குவதில் மூலக்கூறு வகைப்பிரித்தல் உதவுகிறது. இது உயிரினங்களின் பரிணாம வரலாற்றின் புதையல் பேழையைத் திறக்கின்றது. ஒரு தாவரத்தை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் மரபணு வரிசை “DNA குறிச்சொற்கள்” அல்லது “DNA வரிக்குறியிடுதல்” என்று அழைக்கப்படுகிறது. உயிரினங்களை அடையாளம் காண்பதிலும், வகைப்படுத்துதலிலும் DNA வரிக்குறியிடுதல் மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றது.

Tags : Botany தாவரவியல்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Summary - Taxonomy and Systematic Botany Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : பாடச் சுருக்கம் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்