வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - முக்கோணத்தின் செங்குத்துக்கோடு | 8th Maths : Chapter 5 : Geometry
முக்கோணத்தின் செங்குத்துக்கோடு
முக்கோணத்தின் உயரம் என்று அறியப்படும் முக்கோணத்தின் செங்குத்துக் கோடு என்பது முக்கோணத்தின் உச்சியிலிருந்து அதன் எதிர்ப்பக்கத்திற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடாகும். செங்குத்துக் கோடானது முக்கோணத்தின் அடிப்பக்கத்தின் மீது செங்கோணத்தை உருவாக்குகிறது. இங்கு ∆ABC இல் AD ஆனது செங்குத்துக்கோடுகளில் ஒன்றாகும் அதாவது, AD ⊥ BC.
செயல்பாடு
1. ஒரு குறுங்கோண முக்கோண வடிவில் வெட்டப்பட்டுள்ள காகிதத்தை எடுத்துக் கொள்க, அதற்கு ABC எனப் பெயரிடுக.
2. முக்கோணத்தின் ஒரு பக்கமானது அதன் மீது பொருந்துமாறும் அப்பக்கத்திற்கு எதிரேயுள்ள உச்சியைப் பெற்றிருக்குமாறும் அம்முக்கோணத்தை மடிக்க.
3. நீங்கள் செங்குத்துக்கோட்டை தெளிவாகக் காண விரும்பினால் இப்போது நீங்கள் செங்குத்துக்கோடு AM ஐ வரைந்து கொள்ளலாம்.
இதேபோன்று மற்ற இரு பக்கங்களின் செங்குத்துக்கோடுகளையும் காண்க. மேலும், உங்கள் ஆசிரியரின் உதவியுடன் செங்கோண மற்றும் விரிகோண முக்கோணங்களின் செங்குத்துக்கோடுகளையும் காண்க. ஒரு முக்கோணத்தின் அனைத்துச் செங்குத்துக்கோடுகளும் ஒரு புள்ளி வழியாகச் செல்கின்றனவா?
எந்தவொரு முக்கோணத்தின் மூன்று செங்குத்துக்கோடுகளும் ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் ஆகும்.
அவ்வாறு சந்திக்கும் புள்ளியானது அதன் செங்கோட்டுமையம் ஆகும். இது H என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
சிந்திக்க
1. குறுங்கோண முக்கோணத்தில், மூன்று செங்குத்துக் கோடுகளும் முக்கோணத்தின் உள்பகுதியிலேயே அமையும்.
அதன் செங்கோட்டு மையம் எங்கு அமையும்?
முக்கோணத்தின் உள்பகுதியில் அமையுமா?
அல்லது வெளிப்பகுதியில் அமையுமா?
2. செங்கோண முக்கோணத்தில், கர்ணத்திற்குச் செங்குத்தாக உள்ள செங்குத்துக்கோடானது உள்பகுதியிலும், மற்ற இரண்டு செங்குத்துக்கோடுகள் செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்களாகவும் அமையும். இவ்வகை முக்கோணங்களுக்குச் செங்கோட்டுமையம் எங்கு அமையும் எனக் கூற இயலுமா?
3. விரிகோண முக்கோணத்தில், விரிகோணத்தைத் தாங்கும் உச்சியிலிருந்து வரையப்படும் செங்குத்துக்கோடு முக்கோணத்தின் உள்பகுதியிலும் குறுங்கோணங்களைத் தாங்கும் உச்சிகளிலிருந்து வரையப்படும் மற்ற இரு செங்குத்துக்கோடுகள் முக்கோணத்தின் வெளிப்பகுதியிலும் அமையும். இவ்வகை முக்கோணங்களுக்குச் செங்கோட்டு மையம் எங்கு அமையும் எனக் கூற இயலுமா?