கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - செவ்வகம் வரைதல் | 8th Maths : Chapter 5 : Geometry
செவ்வகம் வரைதல்
கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்திச் செவ்வகம் வரையும் முறைகளைக் காண்போம்.
(i) நீளம் மற்றும் அகலம்
(ii) ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம்
1. நீளமும் அகலமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது செவ்வகம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.38
BE = 5 செ.மீ மற்றும் BN = 3 செ.மீ அளவுகள் கொண்ட BEAN என்ற செவ்வகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: BE = 5 செ.மீ மற்றும் BN = 3 செ.மீ
வரைமுறை:
1. BE = 5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. B இல், BX ⊥ BE ஐ வரைக.
3. B ஐ மையமாகக் கொண்டு 3 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது BX ஐ N இல் வெட்டட்டும்.
4. E மற்றும் N ஐ மையங்களாகக் கொண்டு, முறையே 3 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை A இல் வெட்டட்டும்.
5. EA மற்றும் NA ஐ இணைக்க.
6. BEAN என்பது தேவையான செவ்வகம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல்:
BEAN என்ற செவ்வகத்தின் பரப்பளவு = l × b சதுர அலகுகள்.
= 5 × 3 = 15 ச.செ.மீ.
2. ஒரு பக்கமும் ஒரு மூலைவிட்டமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது செவ்வகம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.39
LI = 6 செ.மீ மற்றும் IE = 7 செ.மீ அளவுகள் கொண்ட LIME என்ற செவ்வகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: LI = 6 செ.மீ மற்றும் IE = 7 செ.மீ
வரைமுறை:
1. LI = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. L இல், LX ⊥ LI ஐ வரைக.
3. I ஐ மையமாகக் கொண்டு, 7 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது LX ஐ E இல் வெட்டட்டும்.
4. I மற்றும் E ஐ மையங்களாகவும், முறையே LE மற்றும் LI இன் நீளங்களை ஆரங்களாகவும் கொண்டு வட்டவிற்கள் வரைக. அவை M இல் வெட்டட்டும்.
5. IM மற்றும் EM ஐ இணைக்க.
6. LIME என்பது தேவையான செவ்வகம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல் :
LIME என்ற செவ்வகத்தின் பரப்பளவு = l × b சதுர அலகுகள்.
= 6 × 3.6 = 21.6 ச.செ.மீ.