கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சிறப்பு நாற்கரங்களை வரைதல் | 8th Maths : Chapter 5 : Geometry
சிறப்பு நாற்கரங்களை வரைதல்
சிறப்பு நாற்கரங்களை வரையத் தொடங்கும் முன், அவற்றை வரைவதற்கு உதவியாக இருக்கும் சில அடிப்படைப் பண்புகளை நாம் நினைவு கூர்வது அவசியமாகும். சில செயல்பாடுகளைச் செய்து பார்ப்பதன் மூலம் அப்பண்புகளைத் தொகுத்து அவற்றை நினைவு கூர்வோம்.
செயல்பாடு
1. ஒரு சோடி சமமற்ற நீளமுள்ள குச்சிகளை (தென்னங்குச்சியின் துண்டுகள் என்க) அவற்றின் ஒரு முனையில் இணைத்தவாறு வைக்கவும்.
2. இப்போது, அதபோன்று மற்றொரு சோடியைச் செய்து முதலில் வைத்துள்ள தென்னங்குச்சிகளின் இணைக்கப்படாத முனைகளுடன் சந்திக்குமாறு வைக்கவும்.
கிடைக்கப்பெறும் மூடிய வடிவத்தின் பெயர் என்ன? அது ஒரு நாற்கரமாகும். அதற்கு ABCD எனப் பெயரிடுக . அதில் எத்தனை பக்கங்கள் உள்ளன? அதன் மூலைவிட்டங்கள் என்னென்ன? மூலைவிட்டங்கள் சமமாக உள்ளனவா? அதன் கோணங்கள் சமமாக உள்ளனவா?
மேற்கூறிய செயல்பாட்டில், பின்வருமாறு உள்ள நாற்கரங்களைப் பெற இயலுமா?
(i) அனைத்துக் கோணங்களும் குறுங்கோணங்கள்.
(ii) அனைத்துக் கோணங்களும் விரிகோணங்கள்.
(iii) இரண்டு கோணங்கள் விரிகோணங்கள்.
(iv) ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்.
(v) ஏதேனும் இரு கோணங்கள் செங்கோணங்கள்.
(vi) மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து.
செயல்பாடு
1. ஒரு சோடி 30°−60°−90° மூலைமட்டங்களைப் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கவும்.
(i) என்ன வடிவத்தை நாம் பெறுகிறோம்? அது ஓர் இணைகரம் ஆகும்.
(ii) அதன் எதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ளதா?
(iii) அதன் எதிர்ப்பக்கங்கள் சமமாக உள்ளனவா?
(iv) அதன் மூலைவிட்டங்கள் சமமாக உள்ளனவா?
(v) மற்றொரு சோடி மூலைமட்டங்களைப் பயன்படுத்தியும் இதே வடிவத்தைப் பெற இயலுமா?
2. இச்செயல்பாட்டிற்கும், ஒரு சோடி 30°−60°−90° மூலைமட்டங்கள் நமக்குத் தேவை. அவற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்க.
(i) என்ன வடிவத்தை நாம் பெறுகிறோம்?
(ii) அது ஓர் இணைகரமா? அது ஒரு நாற்கரம் ஆகும். உண்மையில் அது ஒரு செவ்வகம் ஆகும். (எப்படி?)
(iii) அவற்றின் பக்கங்களின் நீளம், கோணங்கள் மற்றும் மூலைவிட்டங்களைப் பற்றி என்ன கூற இயலும்.
அவற்றை விவாதித்துப் பட்டியலிடுக.
3. மேற்கண்ட செயல்பாட்டினை, ஒரு சோடி 45°−45°−90° மூலைமட்டங்களைப் பயன்படுத்தி மீண்டும் செய்க.
(i) இப்போது என்ன வடிவமாக மாறுகிறது? அது ஓர் இணைகரமா? அது ஒரு சதுரமாக மாறியுள்ளது. (எப்படி நிகழ்ந்தது?)
(ii) அதன் பக்கங்களின் நீளங்கள், கோணங்கள் மற்றும் மூலைவிட்டங்களைப் பற்றி என்ன கூற இயலும்?
அவற்றை விவாதித்துப் பட்டியலிடுக.
(iii) செவ்வகத்தைப் பற்றி நாம் தொகுத்த பட்டியலிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
4. 30°−60°−90° கோண அளவுள்ள நான்கு ஒத்த கோணமானிகளையே மீண்டும் இச்செயல்பாட்டிற்குப் பயன்படுத்துவோம். அவை எவ்வாறு ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளுமாறு வைக்கப்பட்டுள்ளன எனக் கவனமாகக் குறித்துக் கொள்க.
(i) இப்போது, நமக்கு இணைகரம் கிடைக்கிறதா?
(ii) அவற்றின் பக்கங்கள், கோணங்கள் மற்றும் மூலைவிட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி நாம் என்ன கூற இயலும்?
(iii) அவற்றின் மூலைவிட்டங்களின் சிறப்பு என்ன?
மேற்கண்ட செயல்பாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விளைவுகளின் அடிப்படையில், இணைகரங்களாக அமையும் சில சிறப்பு நாற்கரங்களின் பல்வேறு பண்புகளையும் நாம் அட்டவணைப்படுத்துவோம்.
இவற்றை முயல்க
1. சரியா தவறா எனக் கூறுக:
(அ) சதுரமானது ஒரு சிறப்புச் செவ்வகம் ஆகும்.
(ஆ) சதுரமானது ஓர் இணைகரம் ஆகும்.
(இ) சதுரமானது ஒரு சிறப்புச் சாய்சதுரம் ஆகும்.
(ஈ) செவ்வகமானது ஓர் இணைகரம் ஆகும்.
2. பின்வரும் நாற்கரங்களின் பெயர்களை எழுதுக.
(அ) மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று இருசமக் கூறிடும்.
(ஆ) மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும்.
(இ) வெவ்வேறு நீளமுள்ள மூலைவிட்டங்களைப் பெற்றிருக்கும்.
(ஈ) சமநீளமுள்ள மூலைவிட்டங்களைப் பெற்றிருக்கும்.
(உ) எதிர்ப்பக்கங்கள் இணையாக இருக்கும்.
(ஊ) எதிர்க்கோணங்கள் சமமாக இருக்கும்.
3. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு கோடிட்ட தாளில் இரண்டு குச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. நான்கு முனைகளையும் இணைப்பதால் கிடைக்கும் வடிவத்தின் பெயர் என்ன?
(அ)
இரு வெவ்வேறு நீளமுள்ள குச்சிகள் மையப்புள்ளியில் சந்திக்குமாறு வைக்கப்பட்டுள்ளன.
(ஆ)
இரு சமநீளமுள்ள குச்சிகள் மையப்புள்ளியில் சந்திக்குமாறு வைக்கப்பட்டுள்ளன.
(இ)
இரு வெவ்வேறு நீளமுள்ள குச்சிகள் செங்குத்தாக இரு சமக்கூறிடுமாறு வைக்கப்பட்டுள்ளன.
(ஈ)
இரு சம அளவு நீளமுள்ள குச்சிகள் மையப்புள்ளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளுமாறு வைக்கப்பட்டுள்ளன.
(உ)
இரு வெவ்வேறு நீளமுள்ள குச்சிகள், கீழ் முனைகள் ஒரே கோட்டிலும் மேல் முனைகள் ஒரே கோட்டில் அமையாதவாறும் மையப்புள்ளியில் வெட்டிக் கொள்ளாதவாறும் வைக்கப்பட்டுள்ளன.
(ஊ)
இரு வெவ்வேறு நீளமுள்ள குச்சிகள், கீழ் முனைகளும் மேல் முனைகளும் ஒரே கோட்டில் அமையுமாறும் மையப்புள்ளியில் வெட்டிக் கொள்ளாதவாறும் வைக்கப்பட்டுள்ளன.