வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 8th Maths : Chapter 5 : Geometry
பாடச்சுருக்கம்
• சர்வசம உருவங்கள் வடிவத்திலும் அளவிலும் சமமாக இருக்கும்.
• வடிவொத்த உருவங்கள் ஒத்த வடிவங்களையும், ஆனால் மாறுபட்ட அளவுகளையும் பெற்றிருக்கும்.
• ஒரு செங்கோண முக்கோணத்தில், கர்ணத்தின் மீதமைந்த சதுரத்தின் பரப்பளவானது, மற்ற இரண்டு பக்கங்களின் மீதமைந்த சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதலுக்குச் சமமாகும். இதுவே பிதாகரஸ் தேற்றமாகும்.
• ஒரு முக்கோணத்தின் மூன்று நடுக்கோடுகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள் ஆகும். முக்கோணத்தின் மூன்று நடுக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதன் நடுக்கோட்டு மையம் ஆகும். இது G என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
• ஒரு முக்கோணத்தின் மூன்று செங்குத்துக்கோடுகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள் ஆகும். முக்கோணத்தின் மூன்று செங்குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதன் செங்கோட்டு மையம் ஆகும். இது H என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
• ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் மையக்குத்துக் கோடுகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள் ஆகும். முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் மையக்குத்துக் கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதன் சுற்றுவட்ட மையம் ஆகும். இது S என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
• ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசமவெட்டிகளும் ஒரு புள்ளி வழிச்செல்லும் கோடுகள் ஆகும். முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசமவெட்டிகளும் சந்திக்கும் புள்ளி அதன் உள்வட்ட மையம் ஆகும். இது I என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
• ஒரு சோடி எதிர்ப்பக்கங்களை இணையாகக் கொண்ட ஒரு நாற்கரமே சரிவகமாகும்.
• எதிரெதிர்ப்பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரமே இணைகரமாகும்.
• அனைத்துப் பக்கங்களும் சமமாகக் கொண்ட இணைகரமே சாய்சதுரம் ஆகும்.
• அனைத்துக் கோணங்களும் செங்கோணங்களாகக் கொண்ட இணைகரமே செவ்வகம் ஆகும்.
• அனைத்துப் பக்கங்களும் அனைத்துக் கோணங்களும் சமமாகக் கொண்ட இணைகரமே சதுரம் ஆகும்.
இணையச் செயல்பாடு
படி 1 உலாவியைத் திறந்து பின்வரும் உரலித் தொடர்பை தட்டச்சு செய்யவும் (அல்லது) விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்யவும். 'வடிவியல்’ என்ற பணிப்புத்தகம் ஜியோஜீப்ராவில் திறக்கும். அதில் 'இணைகரம்' என்ற பணித்தாள் மீது சொடுக்கவும்.
படி 2 கொடுக்கப்பட்ட பணித்தாளில் நீங்கள் ஸ்லைடர்களை அடிப்படை, உயரம் மற்றும் கோணத்தை நகர்த்தலாம். இணையான வரைபடம், செவ்வகம் மற்றும் சதுரமாக மாறுகிறது என்பதை சரிபார்க்கவும். பண்புகளை ஆய்வு செய்யவும்.
இந்த அலகிற்கான மீதமுள்ள பணித்தாள்களை முயற்சி செய்யவும்.
இந்த தொடர்பில் உலாவவும்
வடிவியல்:
https://www.geogebra.org/m/fqxbd7rz#chapter/409576 மற்றும் விரைவுத் தகவல் குறியீட்டை நுட்பமாய் சோதிக்கவும்.
இணையச் செயல்பாடு
படி 1 உலாவியைத் திறந்து பின்வரும் உரலித் தொடர்பை தட்டச்சு செய்யவும் (அல்லது) விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்யவும். 8 ஆம் வகுப்பு பருவம் III என்ற பணிப்புத்தகம் ஜியோஜீப்ராவில் திறக்கும். அதில் 'Rectangle Constraction' என்ற பணித்தாள் மீது சொடுக்கவும்.
படி 2 செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை மாற்ற ஸ்லைடர்களை இடது பக்கத்தில் நகர்த்தவும் ஸ்லைடரை படிப்படியாக வலதுபுறமாக இழுக்கவும். கட்டுமானத்திற்கான படிகளைப் பார்க்கவும்.
இந்த தொடர்பில் உலாவவும்
வடிவியல்:
https://www.geogebra.org/m/xmm5kj9r மற்றும் விரைவுத் தகவல் குறியீட்டை நுட்பமாய் சோதிக்கவும்.