அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - வடிவியல் | 8th Maths : Chapter 5 : Geometry
இயல் 5
வடிவியல்
கற்றல் நோக்கங்கள்
• சர்வசம மற்றும் வடிவொத்த முக்கோணங்களின் அடிப்படைப் பண்புகளை நினைவு கூர்தல்.
• முக்கோணங்களில் சர்வசம மற்றும் வடிவொத்த முக்கோணங்களின் பண்புகளைக் கொண்ட தேற்றங்களைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் அவற்றைக் கணக்குகளில் பயன்படுத்துதல்.
• பிதாகரஸ் தேற்றத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அதைப் பயன்படுத்திக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.
• முக்கோணத்தின் நடுக்கோடுகள், குத்துக்கோடுகள், கோண இருசம வெட்டிகள் மற்றும் மையக்குத்துக்கோடுகள் ஆகியவை ஒரே புள்ளிவழிச் செல்வதைப் புரிந்துகொள்ளுதல்.
• கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு பல்வகை நாற்கரங்களை வரைதல்.
அறிமுகம்
வடிவியலானது, வடிவங்களின் பண்புகள் மட்டுமின்றி புள்ளிகள், வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் திடப் பொருள்களுக்கிடையேயுள்ள உறவுகளைப் பற்றியும் அறிய உதவுவதாகும். முந்தைய வகுப்புகளில், நாம் முக்கோணங்களின் ஒரு சில அடிப்படைப் பண்புகள் குறித்துப் படித்திருக்கிறோம். இந்த வகுப்பில் நாம் அவற்றை நினைவு கூர்வதுடன் சர்வசம மற்றும் வடிவொத்த முக்கோணங்கள் குறித்து பார்க்க இருக்கிறோம். மேலும், பிதாகரஸ் தேற்றத்தையும், முக்கோணத்தின் நடுக்கோடுகள், குத்துக் கோடுகள், கோண இருசம் வெட்டிகள் மற்றும் மையக்குத்துக்கோடுகள் ஆகியவை ஒரே புள்ளிவழிச் செல்வதையும், கொடுக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் கோணங்களைக் கொண்டு பல்வகை நாற்கரங்கள் வரைதலையும் கற்போம்.
எங்கும் கணிதம் − அன்றாட வாழ்வில் வடிவியல்
தூரத்தையும் உயரத்தையும் காண்பதற்குப் பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்துதல்.
நீடித்த மற்றும் வலிமையான கட்டடங்களைக். கட்டமைப்பதில் சர்வசம முக்கோணங்களைப் பயன்படுத்துதல்.
முக்கோணங்களின் பண்புகளை நினைவு கூர்ந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:
1. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.
2. ஒரு முக்கோணத்தின் வெளிப்புறக்கோணமானது ……………………….. கோணங்களின் கூடுதலுக்குச் சமம்.
3. ஒரு முக்கோணத்தில், ஏதேனும் இரு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட ………………….. இருக்கும்.
4. ஒரு முக்கோணத்தில் சமபக்கங்களுக்கு எதிரேயுள்ள கோணங்கள் …………………… அதன் மறுதலையும் உண்மையாகும்.
5. முக்கோணம் ABC இல் ∠A ஐக் காண்க.